மணப்பாறை அருகே வக்கீல் கொலையில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மணப்பாறை, டிச.10: மணப்பாறை அருகே வக்கீல் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் மகன் ஜெகதீஸ்பாண்டி (30), வழக்கறிஞர். வெளிமாநிலங்களிலிருந்து தென் மாவட்டங்களுக்கு வரும் கார்களை ஷோரூம்களில் இறக்கும் கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார். இதேபோல் திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்னொரு தரப்பினர் கான்ட்ராக்ட் எடுத்து தொழில் செய்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் வக்கீல் ஜெகதீஷ்பாண்டி, திருச்சி ஒப்பந்தத்தைவேறு ஒருவருக்கு வாங்கி கொடுத்தது தொடர்பாக இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இப்பிரச்னையை அய்யர்மலையில் பேசி தீர்ப்பதற்காக ஜெகதீஷ்பாண்டி, அவரது அண்ணன்கள் சிலம்பரசன்(35), சவுந்தரபாண்டி(34), மைத்துனர் ஜெயபாண்டி(34) உள்ளிட்ட 6 பேர் கடந்த ஏப்ரல் 9ம் தேதி காரில் வந்தனர். மணப்பாறையை கடந்து குளித்தலை ரோட்டில் கார் சென்றபோது கூலிப்படை கொண்ட கும்பல் காரை மறித்து ஜெகதீஸ்பாண்டியை வெட்டி கொலை செய்தது. இதனை தடுக்க முயன்ற சிலம்பரசன், ஜெயபாண்டியையும் மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பி விட்டனர்.

Advertising
Advertising

இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே அரவிந்த், பாலமுருகன், தங்கமலை, செல்வம், விக்னேஷ் உள்ளிட்ட பலரை பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் அரவிந்த் என்பவர் திருச்சி பகுதிக்கான கார் இறக்கும் கான்ட்ராக்ட்டை பெற்றிருந்தது தெரியவந்தது. எனவே தொழில்போட்டி தகராறில் அரவிந்த் கூலிப்படையை ஏவி வக்கீலை கொலை செய்ததும், அவரும் கொலையில் ஈடுபட்டது தெரிந்தது. மேலும் இக்கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்த விஜயபாண்டி என்பவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, மணப்பாறை போலீசார் விஜயபாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் மற்றொரு குற்றவாளியான பப்லு (எ) பிரபு மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: