ரூ.7,677 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள காவிரிதெற்கு- வெள்ளாறு இணைப்பு கால்வாய் பணியை துவங்க ேவண்டும்

திருச்சி, டிச.10: காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல் கட்டமாக ரூ.7,677 கோடியில் மாயனூர் - வெள்ளாறு வரை இணைப்புக்கால்வாய் வெட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். தமாகா விவசாய அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன், ‘காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் எப்போது துவங்கப்படும்? அதற்கான பணிகள் மாயனூரில் ரூ.300 கோடியில் துவங்கி 10 கி.மீ., தூரம் வாய்க்கால்வெட்டி அப்படியே கிடப்பில் உள்ளது. இப்பணிகளை விரைந்து துவங்க வேண்டும்’ எனு தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியிருந்தார். இந்த மனு தொடர்பாக புலியூர் நாகராஜனுக்கு திருச்சி பொதுப்பணித்துறை திட்டம் மற்றும் வடிவமைப்பு கோட்ட செயற்பொறியாளர் ரமேஷ்குமார் அனுப்பிய பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் தேசிய தொலை நோக்கு திட்டத்தில் மகாநதி - கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - பாலாறு - காவிரி - வைகை - குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டம் ஒன்றாகும். இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தேசிய நீர் மேம்பாட்டு முகமையினால் 2004ம் ஆண்டு தயாரித்து கொடுக்கப்பட்டது.

தற்போது தேசிய நீர் மேம்பாட்டு முகமை (NWDA) விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தில் மகாநதியில் இருந்து கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி, குண்டாறு இணைப்பினை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், பாலாற்றில் இருந்து காவிரியை கல்லணையில் சேர்ப்பதற்கு பதிலாக மாயனூரில் சேர்ப்பதற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இத்திட்டத்தில் காவிரி-குண்டாறு இணைப்பு கால்வாய் காவிரியில் கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் இருந்து துவங்கி குண்டாறு வரை செல்கிறது. இத்திட்டத்திற்கான கருத்துரு தமிழக அரசின் மூலம் மத்திய அரசுக்கு கொள்கை அளவில் ஒப்புதல் பெற வேண்டி சமர்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது தேசிய தொலைநோக்கு திட்டத்தின் கீழ்வருவதால் இத்திட்டத்தினை தேசிய திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட வேண்டும் என தொடர்ந்து வலியறுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே காவிரி தெற்கு வெள்ளாறு இணைப்புக் கால்வாய் பணியை மேற்கொள்ள ரூ.7,677 கோடிக்கு DRP தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது’ என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து புலியூர் நாகராஜன் கூறுகையில், ‘கரூர் மாவட்டம் மாயனூரிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் தென் பகுதியான திருமயம் அருகே உள்ள வெள்ளாறுவரை இணைப்பு கால்வாய் வெட்டுவதற்கு ரூ.7,677 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக துவங்க வேண்டும்’ என்றார்.

Tags : Kaviratne-Velar ,
× RELATED சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு: தாழையூத்தில் இன்று முழு கடையடைப்பு