திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தில்

திருவெறும்பூர், டிச.10: திருவெறும்பூர் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு வரும் 27ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. திருவெறும்பூர் ஒன்றியத்தில் 20 ஊராட்சிகள், 16 ஒன்றிய கவுன்சிலர்கள், ஒரு மாவட்ட கவுன்சிலர், ஒரு மாவட்ட கவுன்சிலரில் 5 ஊராட்சிகள், மீதம் 9 ஊராட்சிகள் மணிகண்டம் ஒன்றிய பகுதி என இரண்டு மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் 174 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆண் வாக்காளர்கள் 46 ஆயிரத்து 509 பேரும், பெண் வாக்காளர்கள் 45 ஆயிரத்து 795 பேரும், திருநங்கைகள் 20 பேர் என மொத்தம் 90 ஆயிரத்து 324 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று தொடங்கிய முதல் நாள் வேட்புமனு தாக்கலில் நவல்பட்டு ஊராட்சியில் ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 5 பேரும், கீழமுல்லைகுடி ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு ஒருவர் என 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

திருவெறும்பூர் ஒன்றியத்தின் தேர்தல் அலுவலராக திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியப்பனும், உதவி அலுவலர்களாக 27 பேர் உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் திருவெறும்பூர் ஒன்றியத்தில் 157 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின்போது பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் துவாக்குடியில் உள்ள திருச்சி அரசு கலைக் கல்லூரியில் விரைவில் நடைபெறும் என்றும் பழனியப்பன் தெரிவித்தார். திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கலையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: