தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை சுவர்களில் வண்ண ஓவியங்கள்

தஞ்சை, டிச. 10: தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாக சுவர்களில் வண்ண ஓவியங்களை அரசு கவின் கல்லூரி மாணவர்கள் வரைந்து வருகின்றனர். தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ராசாமிராசுதார் மருத்துவமனை 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் தினம்தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனை சுவர்களில் பல்வேறு கட்சியினர், வணிக நிறுவனத்தினர், பல்வேறு சமூக அமைப்பினர், நிறுவனத்தின் பெயர்களை எழுதியும், வரைந்தும், போஸ்டர்களும் ஒட்டியிருந்தனர். இதனால் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் சேதமடைந்து வந்தது. இதை தடுக்க மருத்துவமனை சுவர்களில் ஓவியங்கள் வரைய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து கும்பகோணத்தில் உள்ள அரசு கவின் கல்லூரியில் படிக்கும் பெயிண்டிங் துறையை படிக்கும் மாணவர்கள், மருத்துவமனை வளாக சுவரில் ஓவியங்கள் வரைய முடிவு செய்தனர்.

பின்னர் மாவட்ட நிர்வாகம், தனியார் நிறுவன உதவியுடன் தற்போது 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுவர்களில் ஓவியங்களை வரைந்து வருகின்றனர். இதுகுறித்து கல்லூரி மாணவர் பிரகதீஸ்வரன் கூறுகையில், மருத்துவமனை வளாக சுவரில் ரசாயனம் இல்லாத பெயிண்டுகளை வைத்து ஓவியங்கள் வரைந்து வருகிறோம். இந்த வர்ணம் முழுவதும் இயற்கை முறையில் வாட்டர் கலராகும். இதுபோன்ற பெயிண்டில் வரைவதால் மழை, வெயிலால் ஓவியங்கள் மங்காமல் பல ஆண்டுகள் இருக்கும். சுவர்களில் ராஜராஜன் உருவ படம், விவசாயம், நெல் அறுவடை, கரும்பு சாகுபடி, கல்லணை, ராஜராஜன் வாழ்ந்த வாழ்க்கை, போர் வீரர்கள், தஞ்சை பெரிய கோயில், கலைதட்டு, பொய்க்கால் குதிரை, பொம்மலாட்டம், தலையாட்டி பொம்மை போன்ற பாரம்பரிய ஓவியங்கள் மற்றும் பழங்கால ஓவியங்களை வரைந்து வருகிறோம். ரூ.15 லட்சம் மதிப்பிலான ஓவியங்கள் வரையப்படுகிறது என்றார்

Related Stories: