×

சாலை விதிமுறையை மதிக்காமல் செல்பவர்களின் வீட்டு முகவரிக்கு நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடு

கும்பகோணம், டிச. 10: சாலை விதிமுறைகளை மதிக்காமல் செல்பவர்களின் வீட்டு முகவரிக்கு நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் கூறினார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் 100 சிசிடிவி கேமராக்கள் மற்றும் 80 இடங்களில் ஒலிபெருக்கிகள் புதிதாக அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. இதன் தொடக்க விழா தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் தலைமையில் நடந்தது. சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் காமகோடி, சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளை துவக்கி வைத்தார். தஞ்சை எஸ்பி மகேஸ்வரன், டிஎஸ்பி ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தனர். இதைதொடர்ந்து டிஐஜி லோகநாதன் நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சை காவல் சரகத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களை உடனே பிடிக்கவும், போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும் கண்காணிப்பு கேமராக்கள் காவல்துறைக்கு 3வது கண்ணாக பயன்படுகிறது.

தஞ்சை, கும்பகோணம் நகரங்களில் 100 சதவீதம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்படுகின்றன. கும்பகோணத்தில் ஏற்கனவே 140 எண்ணிக்கையில் இருந்த கேமராக்கள் இப்போது கூடுதலாக 100 வைக்கப்பட்டுள்ளது. இவற்றோடு மக்கள் அதிகம் கூடும் 80 இடங்களில் ஒலிபெருக்கிகள் வைத்து காவல்துறையின் வழிகாட்டும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இத்தகைய செயல் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் குற்ற சம்பவங்கள் நடைபெறுவது பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய நகரங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை நிறுவுவதற்கும், கடற்கரை சாலை, செக்போஸ்ட் ஆகிய இடங்களில் கேமராக்கள் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து பள்ளி, கல்லூரி வாகனங்கள், தனியார் மற்றும் அரசு பஸ்கள், மினி பஸ்களில் கேமரா வைக்க தேவையான ஏற்பாடு செய்யப்படுகிறது.

பொதுமக்களுக்கு விரைந்து சேவை செய்யும் வகையில் காவலன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு அதன் செயல்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. வங்கிகள், நகைக்கடைகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு கேமராக்கள் பணியில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர மோட்டார் வாகனங்கள் ஓட்டிய 1.20 லட்சம் பேர் மீதும், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தலா ஒரு லட்சம் பேர் மீது என மொத்தம் 3.20 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாதது மற்றும் சாலை விதிமுறைகளை மதிக்காமல் செல்பவர்களின் வீட்டு முகவரிக்கு டிஜிட்டல் முறையில் நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கும்பகோணத்தில் வெளிமாநில பெண் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கோர்ட் விசாரணை விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ளது என்றார்.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே பின்னையூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு