தஞ்சை பகுதியில் வெங்காயம் பதுக்கி விற்பனையா?

தஞ்சை, டிச. 10: தஞ்சை காமராஜர் காய்கறி மொத்த விற்பனை சந்தையில் வெங்காயத்தை பதுக்கி வைத்து வியாபாரம் செய்கிறார்களா என்று தமிழக குடிமைப்பொருள் வணிக குற்ற புலனாய்வு துறையினர் அதிரடியாக ஆய்வு செய்தனர்.

இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் ஏறி கொண்டே இருக்கிறது. இதனால் வெங்காயத்தை வாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் மொத்த விற்பனையாளர்களிடம் எவ்வளவு வெங்காயம் இருப்பு உள்ளது, விற்பனை விலை என்ன என்பது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை தமிழக காவல்துறையின் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை சார்பில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி தஞ்சை காமராஜர் பெரிய காய்கறி மார்க்கெட்டில் உள்ள வெங்காய மொத்த வியாபாரிகளான சேகர், ராஜூ, அய்யாதுரை, சிதம்பரம் ஆகியோரிடம் திருச்சி சரக டிஎஸ்பி பாரதிதாசன் தலைமையில் தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி, எஸ்ஐ கோகுலகண்ணன், தஞ்சை வட்ட வழங்கல் அலுவலர் ஜோசப் மற்றும் போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகளவில் இருப்பு வைத்து கொண்டாலோ, அதிக விலைக்கு விற்பனை செய்தாலோ அத்யாவசிய பொருட்கள் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுத்தனர். மேலும் வியாபாரிகளிடம் வெங்காயத்தின் இருப்பு, சந்தை நிலவரம் குறித்து கணக்கெடுத்து சென்றனர்.

Related Stories: