கும்பகோணம் ரயில் நிலையத்தில் 2, 3ம் நடைமேடை விரிவாக்க பணிக்கு ஒப்புதல் அளித்தும் நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம்

கும்பகோணம், டிச. 10: கும்பகோணம் ரயில் நிலையத்தில் 2 மற்றும் 3ம் நடைமேடை விரிவாக்க பணிக்கு ஒப்புதல் அளித்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிலம் கையகப்படுத்தும் பணி தாமதமாக நடந்து வருகிறது. இதனால் ரூ.2 கோடி நிதி கிடப்பில் கிடக்கிறது. கும்பகோணம் ரயில் நிலையத்தில் அகலபாதை 2004ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அப்போது மயிலாடுதுறை மார்க்கத்தில் மீட்டர்கேஜ் பாதை இருந்ததால் அகல பாதையில் நடைமேடைகள் குறுகிய நீட்டத்தில் அமைக்கப்பட்டது. 2006ம் ஆண்டு மயிலாடுதுறை வரையிலும், 2011ம் ஆண்டு விழுப்புரம் வரையிலும் முழுவதுமாக அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. இதையடுத்து சென்னை, மைசூர், நெல்லை, ராமேஸ்வரம், திருச்செந்தூர், புவனேஸ்வர், காசி, திருப்பதி, அயோத்தி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு நேரடி ரயில்கள் கும்பகோணம் வழியே அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் எதிரெதிர் திசையில் வரும் ரயில்கள் கும்பகோணத்தில் மாறி (கிராசிங்) செல்ல வேண்டியுள்ளது. ஆனால் நடைமேடைகள் நீட்டம் முழுவதும் இல்லாததால் 2, 3ம் நடைமேடைகளில் வந்து நிற்கும் ரயில்களில் பயணிகள் ஏறி இறங்க அவதிப்பட்டனர்.

இதையடுத்து பெருகி வரும் ரயில் சேவைக்கேற்ப 2, 3 நடைமேடைகளின் நீட்டத்தை 24 ரயில் பெட்டிகள் கொள்ளளவுக்கு அதிகப்படுத்த தஞ்சை மாவட்ட ரயில் உயோகிப்பாளர்கள் சங்கத்தினர், ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். நடைமேடை நீட்டிக்க நில ஆர்ஜிதம் செய்ய வேண்டியிருந்ததால் பணி தாமதப்பட்டது. இதையறிந்த அப்போதைய ரயில்வே அதிகாரிகள், ரயில் நிலையத்தில் கூட்டாய்வு மேற்கொண்டார். இதனால் தேவையான நிலத்தை கண்டறிந்து அவற்றை கணக்கிடும் பணி முடிக்கி விடப்பட்டது. இதைதொடர்ந்து ரயில்வே துறை திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் கும்பகோணம் ரயில் நிலைய நடைமேடை விரிவாக்கத்துக்கான பணிகள் ரூ.2.08 கோடி மதிப்பில் செய்து முடிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து பணிகள் விரைவாக துவங்கி நிறைவடையும் என்று பயணிகள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஆனால் நடைமேடை விரிவாக்க பணிகளுக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தி ஒப்படைப்பதில் மாவட்ட நிர்வாகம் போதிய முனைப்பு காட்டவில்லை. இதனால் நிதி ஒதுக்கீடு செய்தும் வேலை துவங்க முடியாமல் ரயில்வே நிர்வாகத்திடம் ரூ.2 கோடி நிதி காத்து கிடக்கும் நிலையில் உள்ளது. மேலும் தஞ்சை- சென்னை எழும்பூர் இடையே இயங்கும் உழவன் விரைவு ரயில் கும்பகோணம் வரும் நேரம் கடந்த ஜூலை மாதம் மாற்றப்பட்ட பின்னரும் சென்னை-திருச்செந்தூர் இடையே இயங்கும் செந்தூர் விரைவு ரயில் தினமும் இருமார்க்கங்களிலும் உழவன் விரைவு ரயில் கிராசிங் மேற்கொள்ள கும்பகோணம் இரண்டாம் நடைமேடையிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால் ரயில் நிலைய மேற்கு பகுதியில் நிறுத்தப்படும் 4 பெட்டிகளில் இருந்து பயணிகள் ஏறி இறங்க சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கும்பகோணம் ரயில் நிலைய நடைமேடைக்கு தேவையான இடங்களை தேர்வு செய்து நடைமேடை அமைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டுமென ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>