×

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேர் உட்பட 38 பேர் மனுதாக்கல்

பெரம்பலூர், டிச. 10: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முதல் நாளான நேற்று ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேர் உட்பட 38 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக வருகிற 27ம் தேதியன்று பெரம்பலூர் மற்றும் வேப்பூர் ஒன்றியங்களிலும், 2ம் கட்டமாக 30ம் தேதியன்று வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் ஒன்றியங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக 27ம் தேதியன்று பெரம்பலூர், வேப்பூர் ஒன்றியங்களில் 4 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங் கள், 37 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 53 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்கள் மற்றும் 462 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என 556 பதவியிடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

2ம் கட்டமாக 30ம் தேதியன்று வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட 4 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 39 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 68 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்கள் மற்றும் 570 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என மொத்தம் 681 பதவியிடங்களுக்கான தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு 293 வாக்குச்சாவடிகளிலும், இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு 355 வாக்குச்சாவடிகளிலும் என மொத்தம் 648 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான மனுதாக்கல் நேற்று (9ம் தேதி) துவங்கியது. இதில் ஆலத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் 9 பேர், பெரம்பலூர் ஒன்றிய அலுவலகத்தில் 8 பேர், வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகத்தில் 2 பேர், வேப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் 17 பேர் என 36 பேர் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு மனுதாக்கல் நடந்துள்ளது.

ஆலத்தூர் ஒன்றியம் புஜங்கராயநல்லூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பதவியிடத்துக்கு 2 பேர் மனுதாக்கல் செய்தனர். இதன்படி மனுதாக்கலின் முதல் நாளில் 38 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். மேலும் 4 ஒன்றிய அலுவலகங்களிலும் 200க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுக்களை வாங்கி சென்றனர். மனுதாக்கல் தொடங்கியதால் ஒன்றிய அலுவலகங்கள் களைகட்ட துவங்கியுள்ளன.

Tags : district ,Perambalur ,Panchayat leader ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்