×

தா.பழூர் அருகே சாலை வசதி கேட்டு 6 லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

தா.பழூர், டிச. 10: தா.பழூர் அருகே சாலை வசதி கேட்டு 6 லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காசாங்கோட்டை கிராமத்தில் கடந்த ஓராண்டாக சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புரந்தான், காசான்கோட்டை, சுத்தமல்லி வழியாக அரியலூர் செல்லக்கூடிய இந்த சாலை அமைப்பதற்கு ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடந்த ஜனவரி 28ம் தேதி வேலை துவங்கப்பட்டுள்ளது. இந்த சாலையை கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஜனார்த்தனன் என்பவர் பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின்கீழ் ஒப்பந்தம் பெற்று தற்போது வரை எந்த வேலையும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த சாலை 9 கிலோ மீட்டர் சாலை என்பதால் அப்பகுதியில் அரியலூர், கும்பகோணம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயங்கி வரும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் ஜெயங்கொண்டம், அரியலூர் உள்ளிட்ட நகர்ப்புற அரசு மருத்துவமனைகளுக்கு செல்பவர்களும் பேருந்து வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் குண்டும் குழியுமாக சாலையில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அதில் விழுந்து காயமடைந்து எழுந்து செல்கின்றனர். மேலும் காசாங்கோட்டை கிராமம் முழுவதும் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அசுத்தமான தண்ணீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றி குண்டும் குழியுமாக கிடக்கும் சாலையை மேடாக்கி மழை காலங்களில் தண்ணீர் தேங்கி கிடக்காமல் வடிவதற்கு இருபுறங்களிலும் தண்ணீர் போக்கிகள் அமைத்து சாலையை செப்பனிட வலியுறுத்தி அப்பகுதியாக கற்கள் ஏற்றி வந்த 6 லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மேலும் தற்போது அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பேருந்து வசதியை மீண்டும் துவங்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Tags : road closures ,
× RELATED புதுச்சேரி-தமிழ்நாட்டை இணைக்கும் 49 சாலைகள் மூடல்