×

ஆபத்தான பாலத்தை அகற்ற வேண்டும் கிராம மக்கள் வலியுறுத்தல்

மானாமதுரை, டிச.10:  மானாமதுரை அருகே தீயனூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள பாலம் கைப்பிடிச்சுவர் இன்றி இடியும் நிலையில் உள்ளது. இதனை அகற்றி விட்டு புதிதாக பாலம் கட்ட வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரை நான்கு வழிச்சாலையில் மேலப்பசலை செல்லும் வழியில் தீயனூர் கிராமம் உள்ளது. இந்த ஊருக்கு செல்லும் சாலையின் குறுக்கே செல்லும் பாசனக் கால்வாயின் மேல் பாலம் ஒன்று உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிறிய பாலத்தை கடந்து தீயனூர் கிராமத்திற்கு செல்லவேண்டும். தீயனூர் தவிர மங்கையேந்தல், பூவானேந்தல், அரிமண்டபம், ராஜாக்கள் குடியிருப்பு உள்ளிட்ட கிராமங்களுக்கும் இந்த சாலை வழியாக செல்லலாம். கடந்த சில நாட்களாக இந்த பாலம் பராமரிப்பின்றி போனதால் பாலத்தின் கைப்பிடிச்சுவர் இடிந்துள்ளது. மேலும் பாலத்தில் ஆங்காங்கே விரிசல்கள் உள்ளதால் பாலம் இடியும் நிலையில் உள்ளது. இந்த சாலையில் லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனப் போக்குவரத்து இருப்பதால் பாலம் இடிந்துவிழ வாய்ப்புள்ளது. இதனால் 10  கிராமங்களுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்படும். எனவே பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மூர்த்தி கூறுகையில், இந்த பாதையில் உள்ள சிறிய பாலத்தின் அடிப்பகுதி, கைப்பிடிச்சுவர் ஆகியவை சேதமடைந்துள்ளது. இதில் பள்ளி வாகனங்கள் செல்லும் போது இடிந்து விழுந்தால் பெரிய விபத்து ஏற்படும். எனவே பழைய பாலத்தை அகற்றி விட்டு புதிதாக இங்கு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Tags :
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்