×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்

ஆர்.எஸ்.மங்கலம், டிச.10: சனவேலி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக பூட்டிக் கிடப்பதால், பெண்களும் குழந்தைகளும் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இதனை உடனே சரி செய்து திறக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சனவேலி கிராமம் திருச்சி-ராமேஸ்வரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த ஊர் கிராமமாக இருந்தாலும் இதன் அருகில் உள்ள சிறு கிராமங்களான கண்ணுகுடி, ஒடைக்கால், கவ்வூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர்களும் ஏதாவது வீட்டு தேவைகளுக்கான சிறு பொருட்கள் வாங்கவேண்டும் என்றாலும் இங்கு தான் வர வேண்டும். இந்த ஊர் சொல்லப் போனால் ஒரு குட்டி டவுன் போன்றது. இப்பகுதி மக்களுக்கு இது மட்டுமின்றி வாரச்சந்தை ஒன்றும் உள்ளது. ஆகையால் எப்போதுமே கொஞ்சம் அதிகமான ஆட்கள் நடமாட்டம் இருக்கவே செய்யும். அப்படியான ஊரில் பொது சுகாதாரத்தை கணக்கில் கொண்டு ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டு இயங்கி வந்தது.

இதனால் உள்ளுர் மற்றும் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. ஆனால் சுமார் கடந்த 3 ஆண்டுகளாகவே இந்த சுகாதார வளாகத்தை ஊராட்சி நிர்வாகம் பூட்டி வைத்துள்ளது. இதனால் பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சுகாதார வளாகத்தை பூட்டி வைத்துக் கொண்டு ச்சீ, ச்சீ திறந்த வெளியில் மலம் கழிக்க கூடாது என்று அரசும் அரசு அதிகாரிகளும் விளம்பர படுத்துவது எந்த வகையில் நியாயம். இதனை உடனே திறக்க ஏற்பாடு செய்யப்படுமா? என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து சிகப்பி கூறுகையில், எங்களை போன்றவர்கள் வெளியூர்களில் இருந்து வந்து பஸ் ஏறிச் செல்லவும் சந்தைக்கு பொருட்கள் வாங்கவும் வருகின்றோம். அவசரத்திற்கு பாத்ரூம் செல்ல வேண்டும் என்றால் பாத்ரூம் பூட்டிக் கிடக்கின்றது. பொது மக்களின் நலன் கருதி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனே சரி செய்ய பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஏற்கனவே தண்ணீர் இல்லை என்ற நிலையில் பூட்டி இருந்தது. ஆனால் தற்சமயம் யூனியனில் இருந்து பாத்ரூம் அருகிலே போர்வெல் போடப்பட்டுள்ளது. தண்ணீர் நல்ல சப்ளையும் உள்ளது. இப்போதய நிலையில் தண்ணீர் உள்ளது. ஆனால்  பூட்டி வைத்துள்ளனர். பொதுமக்களின் நலன் கருதி சுகாதார வளாகத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றார்.

Tags : Locked Health Complex ,RS Mangalam ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரும்பு ஜூஸ், இளநீர் விற்பனை ஜோரு