சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலைபோல் உள்ளாட்சி தேர்தலிலும் வாகன சோதனை

மதுரை, டிச. 10: மதுரை மாவட்டத்தில் நேற்று ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கியது. இதனைத்தொடர்ந்து, கலெக்டர் வினய் மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஒன்றியத்தில் நடைபெறும் வேட்பு மனு தாக்கல் தொடர்பான பணிகளை பார்வையிட்டார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மதுரை மாவட்டத்தில் முதல்கட்டமாக 27ம் தேதி 6 ஒன்றியங்களிலும், இரண்டாவது கட்டமாக 30ம் தேதி 7 ஒன்றியங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தாக்கல் செய்யலாம். மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தொடர்புடைய ஒன்றிய அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வேட்பு மனு தாக்கலுக்காக ஒரு ஒன்றியத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 780 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் வாக்குச்சாவடியில் பணியாற்ற சுமார் 17 ஆயிரம் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய சம்பள அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு இந்த வார இறுதியில் பயிற்சி கொடுக்கப்படும். வேட்பு மனு தாக்கலுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் எவ்வாறு விதி மீறல் தொடர்பாக வாகன சோதனை நடத்தப்பட்டதோ, அதே போன்று இந்த தேர்தலிலும், வாகன சோதனை நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதற்கான வழிகாட்டுதலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. அதனைத்தொடர்ந்து, வாகன சோதனை நடைபெறும்’’ என்றார். கலெக்டர் வினய் தகவல் சொத்து மதிப்பு பட்டியல் அவசியம்  ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வோர் சொத்து மதிப்பு பட்டியல் அவசியம் வழங்க வேண்டும். மேலும் குற்ற நடவடிக்கை, சிறை தண்டனை பெற்றது தொடர்பாக உறுதிமொழி ஆவணம் (அபிடவிட்) கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் உறுதிமொழி ஆவணம் தாக்கல் செய்ய தேவையில்லை என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories: