×

விற்பனைக்கு தயார் பழநி கோயிலில் காட்சி பொருளான ஸ்கேனிங் இயந்திரம்

பழநி, டிச. 10: பழநி கோயிலில் காட்சி பொருளாக இருக்கும் ஸ்கேனிங் இயந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் நாளொன்றிற்கு 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். இம்மலைக்கோயிலில் நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலை, போகர் சன்னதியில் பழமை வாய்ந்த மரகதத்தால் ஆன லிங்கம், தங்கத் தேர் உள்ளது. மேலும், தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானதாக பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இதுபோன்ற காரணங்களுக்காக பழநி கோயிலில் எப்போதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். படிப்பாதை, யானைப்பாதை, வின்ச், ரோப்கார் நிலையங்களின் மேல் மற்றும் கீழ் தளங்களில் டோர் டிடெக்டர் மூலம் பக்தர்கள் சோதனை செய்யப்படுகின்றனர். மலைக்கோயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை சோதனை செய்யும் ஸ்கேனிங் இயந்திரம் பழநி கோயிலில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார் கூறியதாவது,பழநி கோயிலில் தற்போது காவல்துறை சார்பில் ஒரு ஸ்கேனிங் இயந்திரம் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. அதுவும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. முக்கிய நாட்கள் மற்றும் உளவுத்துறை எச்சரிக்கை தேதிகளில் மட்டும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மற்ற நாட்களில் போலீஸ் கண்காணிப்பு, பரிசோதனை போன்றவை பெரிய அளவில் இருக்காது. எனவே, சபரிமலை, திருப்பதி போன்று சிறப்பு அதிரடிப்படை ஏற்படுத்தப்பட்டு பழநி கோயிலின் பாதுகாப்புப்பணி அவர்களது வசம் ஒப்படைக்கப்பட்டு விட வேண்டும். மேலும், கோயில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு, பரிசோதனை உபகரணங்கள் வாங்கி வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : sale ,Pazhani Temple ,
× RELATED ₹3.63 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்