விலை உயர்வு எதிரொலி தமிழகம் முழுவதும் வெங்காய குடோன்களில் அதிரடி சோதனை

சேலம், டிச.10: தமிழகம் முழுவதும், வெங்காய குடோன்களில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக நேற்று சோதனையில் ஈடுபட்டனர். வடமாநிலங்களில் பெய்த கனமழையால், வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விலை கிடு,கிடுவென உயர்ந்துள்ளது. ஒருகிலோ பெரிய வெங்காயம் ₹100 முதல் ₹140 வரையும், சின்ன வெங்காயம் ₹100 முதல் 160 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், சாமானிய மக்கள் சமையலுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறு உணவகம் முதல் பெரிய ஓட்டல்கள் வரை வெங்காயத்தின் விலை மிரட்டி வருகிறது. இந்நிலையில், தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனிடையே, தமிழ்நாட்டில் வெங்காயத்தை குடோன்களில் பதுக்கி வைப்பதாக புகார் எழுந்தது. இதனை தடுக்கும் வகையில், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி பிரதீப் வி.பிலிப் உத்தரவின் பேரில், எஸ்பி சாந்தி மேற்பார்வையில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தமிழகம் முழுவதும் உள்ள வெங்காய குடோன்களில் நேற்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

 அதன்படி, கோவை மண்டல டிஎஸ்பி ரவிக்குமார் தலைமையில், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்பட 8 மாவட்டங்களில் உள்ள வெங்காய குடோன்களிலும், காய்கறி கடைகளிலும் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோபி, எஸ்எஸ்ஐ அருண்குமார், பால்ராஜ், ரகுநாத் மற்றும் போலீசார் சேலம் லீபஜார், சூரமங்கலம், செவ்வாய்ப்பேட்டை பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட வெங்காய குடோன்களில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகளிடம், குடோன்களில் எவ்வளவு வெங்காய இருப்பு உள்ளது என்பது குறித்தும், அளவுக்கு அதிகமாக ஏதாவது வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தனர். மேலும், இருப்பு குறித்த பதிவேடுகளை சரிபார்த்தனர். வெங்காயத்தை குடோன்களில் பதுக்கினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் எச்சரித்தனர்.

Related Stories: