தொடர்ந்து 28வது நாளாக மேட்டூர் நீர் மட்டம் 120 அடியாக நீடிப்பு

மேட்டூர், டிச.10: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 6,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 6300 கனஅடியாக சரிந்தது. ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க  விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 5900 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 5,993 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியும்,  கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 750 கனஅடியும்  தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. நடப்பு நீர்பாசன ஆண்டில் மேட்டூர் அணையின் நீர்மட்டம், 28வது நாளாக 120 அடியாக உள்ளது. தொடர்ந்து 2 நாட்கள் 120 அடிக்கு குறையாமல் இருக்கும்பட்சத்தில், நடப்பாண்டில் தொடர்ந்து ஒரு மாதமாக முழு கொள்ளளவுடன் இருந்த சாதனையை மேட்டூர் அணை படைக்கும்.

Related Stories: