வேட்புமனு தாக்கல் செய்ய ஆளில்லை வெறிச்சோடிய ஒன்றிய அலுவலகம்

ஓமலூர், டிச.10: உள்ளாட்சி தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கலுக்கு வேட்பாளர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்ததால், ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

ஓமலூர் ஒன்றியத்தில் 33 ஊராட்சிகள், 324 ஊராட்சி வார்டுகள், 27 ஒன்றிய கவுன்சிலர், மூன்று மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. காடையாம்பட்டி ஒன்றியத்தில் 17 கிராம ஊராட்சிகள் 186 ஊராட்சி வார்டுகள், 19 ஒன்றிய கவுன்சிலர், 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகளும், தாரமங்கலம் ஒன்றியத்தில் 17 கிராம ஊராட்சிகள், 165 ஊராட்சி வார்டுகள், 13 ஒன்றிய கவுன்சிலர்கள், 1 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. உள்ளாட்சி தேர்தல் வரும் 27, 30ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடக்கிறது. இந்நிலையில், நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. ஓமலூர் ஒன்றிய அலுவலகத்தில், ஓமலூர் ஒன்றிய தேர்தல் பிரிவு அலுவலர் முருகன், காடையாம்பட்டி தேர்தல் அலுவலர் கருணாநிதி, தாரமங்கலம் தேர்தல் அலுவலர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் அலுவலர்கள், வேட்பு மனுக்கள், வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் கையேடுகளை சரிபார்த்து தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால், நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட பிரச்னைகளால் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட ஆர்வம் குறைந்ததால், நேற்று காலை வேட்பு மனு தாக்கல் செய்யவோ, வாங்கி செல்லவோ ஒருவர் கூட வரவில்லை. இதனால், அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. தேர்தல் பிரிவு அலுவலர்கள் வேட்பாளர்களின் வருகைக்காக காத்திருந்தனர்.

அதை தொடர்ந்து, மதியத்திற்கு மேல் ஓமலூர் ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவருக்கு 7 பேரும், ஒன்றிய கவுன்சிலருக்கு ஒருவரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 44 பேரும், தாரமங்கலம் ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவருக்கு 4 பேரும், ஊராட்சி வார்டு கவுன்சிலருக்கு 18 பேரும், காடையாம்பட்டி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவருக்கு 2 பேரும், வார்டு கவுன்சிலர் பதவிக்கு 36 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 3 ஒன்றியங்களிலும் ஒருவர் கூட மனுத்தாக்கல் செய்யவில்லை.இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறுகையில், ‘வேட்பு மனுக்களை வாங்க வேட்பாளர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது. கடந்த 2016ல் வழங்கப்பட்ட வேட்பாளர் கையேட்டில், தற்போது அறிவித்துள்ள வேட்புமனு கட்டணம், விதி குறித்த இரண்டு பக்க தாள் இணைக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுதாக்கல் செய்யும் வேட்பாளருக்கு, இந்த கையேடு வழங்கப்படும்,’என்றனர்.

ஆட்டையாம்பட்டி:வீரபாண்டி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 25 கிராம ஊராட்சி ஒன்றிய தலைவர், ஒன்றிய குழு தலைவர் மற்றும் 25 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 219 பதவிகளுக்கு வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டது. முதல் நாளான நேற்று, 100க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் வாங்க வந்தனர். வீரபாண்டி ஒன்றியத்தில் 219 பதவிகளுக்கு 170 பூத்துக்கள் அமைக்கப்பட்டு, வாக்குப்பெட்டிகள் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஒன்றியக்குழு தேர்தல் அதிகாரி முரளிதரன் மற்றும் ஊராட்சி ஒன்றிய தேர்தல் அதிகாரி முத்துவிஜயா ஆகியோர் தெரிவித்தனர்.

Related Stories: