அரசு பள்ளி முன்பு தேங்கி கிடக்கும் கழிவுநீர் குட்டை

இளம்பிள்ளை, டிச.10:சின்ன சீரகாபாடி அரசு பள்ளி நுழைவுவாயிலில் நாள்கணக்கில் கழிவுநீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள், ஆசிரியர்கள் அவதியடைந்துள்ளனர். வீரபாண்டி ஒன்றியம், சின்ன சீரகாபாடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை ஒட்டிய குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பள்ளியின் சுற்று சுவரை ஒட்டி குட்டை போல் தேங்கியுள்ளது. இந்த கழிவுநீர் குட்டை பள்ளி நுழைவு வாயில் பகுதியில் நாள்கணக்கில் தேங்கி கிடப்பதால் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளது. மேலும் கழிவுநீர் குட்டையில் கொசு புழுக்கள் உற்பத்தியாகி வருவதால், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகிறது. கழிவுநீர் குட்டையை அகற்ற வலியுறுத்தி, வீரபாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தொடக்கக்கல்வி அலுவலரிடம் பலமுறை புகாரளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மாணவர்களின் நலன் கருதி, சுகாதாரத்துறை அதிகாரிகள் சுகாதார ஊழியர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: