×

மாவட்டம் முழுவதும் 3106 பதவிகளுக்கு தேர்தல் முதல்நாளில் 187 பேர் வேட்புமனு தாக்கல்

நாமக்கல், டிச.10: நாமக்கல் மாவட்டத்தில் 3106 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல்நாளில் 187 பேர் பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதனையொட்டி, பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வரும் 27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வரும் 16ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசிநாளாகும். நாமக்கல் மாவட்டத்தில் 15 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 322 ஊராட்சி மன்றத் தலைவர்,  2595 ஊராட்சி மன்ற உறுப்பினர், 17 மாவட்ட கவுன்சிலர், 172 ஒன்றியக்குழு உறுப்பினர் என மொத்தம் 3106 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று 322 ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் 15 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் துவங்கியது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு தனித்தனி இடங்களில் மனுத்தாக்கல் நடைபெற்றது. ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

நேற்று முதல் நாளில், மாவட்டம் முழுவதும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ஒருவரும், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 23 பேரும், ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு 12, ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 151 பேர் என மொத்தம் 187 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். அரசியல் கட்சி சார்பில் நேற்று அதிகளவில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. பஞ்சாயத்து தலைவர், பஞசாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் சுயேச்சை சின்னம் ஒதுக்கப்பட்டும், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர் தேர்தல் அரசியல் கட்சிகளின் சின்னங்களின் அடிப்படையிலும் நடைபெறுகிறது. வேட்பு மனுத்தாக்கல் பணிகளை நேற்று கலெக்டர் மெகராஜ் நேரில் ஆய்வு செய்தார். நாமக்கல், பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு சென்று வேட்பு மனுத்தாக்கலுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். மனுத்தாக்கல் செய்த நபர்கள் விபரத்தை உடனுக்குடன் கணினியில் பதிவு செய்து, மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்  என தேர்தல் அலுவலர்களை கேட்டுக்கொண்டார். வேட்பு மனுத்தாக்கலையொட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.



Tags : election ,district ,
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...