×

ஏலத்தொகையை ரொக்கமாக கேட்டு பருத்தி விவசாயிகள் திடீர் தர்ணா

ராசிபுரம். டிச.10: பருத்திக்கான ஏலத்தொகையை ரொக்கமாக கேட்டு ராசிபுரத்தில் விவசாயிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பரவலாக பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். ராசிபுரம், வெண்ணந்தூர், புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, குருசாமிபாளையம், கண்ணூர்பட்டி, கடந்தப்பட்டி, தொப்பப்பட்டி, அரியாகவுண்டம்பட்டி மற்றும் சிங்களாந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் பருத்திகளை ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் ஏல விற்பனைக்கு கொண்டு வருவார்கள். பருத்திக்கான தொகை ரொக்கமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ₹19500க்கு மேல் இருந்தால், காசோலையாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக வங்கிக்கு செல்லும் நிலை காணப்படுகிறது. இதனால், காலவிரயத்துடன் அலைச்சலுக்குள்ளாகி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர். எனவே, பருத்திக்கான தொகையை ரொக்க வழங்க வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், ஆர்.கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஏல மையம் நேற்று காலை வழக்கம்போல் பருத்தி விற்பனை நடைபெற்றது. இதில், பருத்தி விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். பருத்தி ஏலம் முடிந்ததும் அதற்கான தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஏல மையத்தின் முன் திரண்டனர். பின்னர், திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவலின்பேரில், ராசிபுரம் போலீசார் மற்றும் கூட்டுறவுத்துறை உயரதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மத்திய அரசின் நடைமுறைப்படி இனி ₹20 ஆயிரத்து மேல் ரொக்கமாக வழங்கப்படாது என விளக்கி கூறி சமரசப்படுத்தினர். இதன்பேரில், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதுகுறித்து கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கூறுகையில், மத்திய அரசு ₹20 ஆயிரத்துக்கும் மேல் ரொக்க பரிவர்த்தனை கூடாது என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ₹20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகைகளுக்கு பருத்தி விவசாயிகளின் வங்கி கணக்கில் ஆர்.டி.ஜி.எஸ். முறையில் வரவு வைக்கப்படுகிறது. விவசாயிகள் குறிப்பிடுவது போல் காசோலை வழங்கப்படுவதில்லை. எனவே, ₹20 ஆயரத்திற்கும் மேற்பட்ட தொகைகள் வங்கியில் தான் வரவு வைக்கப்படும் என்றனர்.



Tags : Cotton farmers ,
× RELATED ஏலத்தொகையை ரொக்கமாக கேட்டு பருத்தி விவசாயிகள் திடீர் தர்ணா