புதுவை மாணவர்களுக்கு 54 இடங்கள் கிடைக்குமா?

புதுச்சேரி, டிச. 10: ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்சிசி மூலம் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இனிவரும் காலங்களில் புதுவை  மாணவர்களுக்கு 54 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே இதுகுறித்து புதுவை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்க தலைவர் நாராயணசாமி, பொருளாளர் விசிசி நாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: ஒரே நாடு ஒரே தேர்வு என்ற அடிப்படையில் இந்த ஆண்டு முதல் ஜிப்மர், எய்ம்ஸ் மற்றும் அனைத்து மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை  நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் நடைபெறும் என்றும், இனி அனைத்து மருத்துவ படிப்புகளுக்கும் www.nta.ac.in, ntaneet.nic.in. என்ற இணையதளம் மூலமாக  விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

Advertising
Advertising

மேலும், இந்த ஆண்டு முதல்  ஜிப்மர் எம்பிபிஎஸ் கலந்தாய்வு மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி (எம்சிசி) வாயிலாக நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் புதுவை மாணவர்களுக்கு 54 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். இதனை புதுவை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மேலும், எம்சிசி இனி கலந்தாய்வு நடத்தும் என்றால் ஜிப்மரில் புதுவை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து இடங்களையும் வெளி மாநில மாணவர்கள் தட்டி பறித்து செல்லும் சூழ்நிலை உருவாகும். ஏனென்றால் கடந்த காலங்களில் ஜிப்மரில் புதுவை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்களை வெளி மாநில மாணவர்கள் முறைகேடான போலி குடியிருப்பு சான்றிதழ்களை கொடுத்து பெற்றுள்ளனர். இதனை எங்களது அமைப்பு மற்றும் சமூக அமைப்புகள் அரசியல் கட்சிகளின் கூட்டு முயற்சியால் தடுக்க முடிந்தது.

ஆகவே முறைகேடுகளை தடுக்கும் வகையில் புதுவை மாநில இட ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்கும் போதும் மாணவர்கள் சேர்க்கையின் போதும் குடியிருப்பு சான்றிதழ்களை புதுவை அரசு அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று ஜிப்மர் மாணவர்கள் சேர்க்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

Related Stories: