செல்லிப்பட்டு படுகை அணையில் குளித்த பொதுமக்கள் வெளியேற்றம்

திருக்கனூர், டிச. 10:  திருக்கனூர் அருகே செல்லிப்பட்டு படுகை அணையில் குளித்த பொதுமக்களை வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருக்கனூர் அருகே செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே படுகை அணை உள்ளது. சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடந்த 10 நாட்களாக இந்த படுகை அணையில் தண்ணீர் நிரம்பி வழிந்து வருகிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அணையில் நீர் நிரம்பியுள்ளதால் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுற்றுலா தலம் போல் சென்று பார்த்து ரசித்தனர்.கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை தினம் என்பதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற உத்தரவிட்டார். இதையடுத்து மேற்கு எஸ்பி ரங்கநாதன் மேற்பார்வையில் திருக்கனூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், குமார் மற்றும் வில்லியனூர் தாசில்தார் மகாதேவன் தலைமையிலான அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று முன்தினம் படுகை அணைக்கு சென்று அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள், அணையில் இறங்கி நடந்து சென்றவர்களை அதிரடியாக அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: