×

மக்களுக்கு வெங்காயத்தை பரிசாக வழங்கிய முதல்வர், அமைச்சர்கள்

புதுச்சேரி, டிச. 10: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 73வது பிறந்தநாள் விழாவில் 100 மகளிருக்கு தலா அரை கிலோ வீதம் 50 கிலோ வெங்காயத்தை முதல்வர் நாராயணசாமி  வழங்கினார். புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாநில தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணா ராவ், ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு கேக் வெட்டி கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து, மகிளா காங்கிரசை சேர்ந்த 100 மகளிருக்கு தலா அரை கிலோ வீதம் 50 கிலோ வெங்காயத்தை வழங்கினார்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் துணை தலைவர் தேவதாஸ், பொதுச்செயலாளர்கள் ஏகேடி.ஆறுமுகம், கண்ணபிரான், செயலாளர் சாம்ராஜ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில், சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பையேற்று, கட்சியை வலுவான இயக்கமாக மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறார். அவரது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது வெங்காயத்தின் விலை நம் நாட்டில் விண்ணுக்கு சென்றிருக்கிறது. மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 130க்கு விற்கப்படுகிறது. இதனால் சாதாரண மக்கள், அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை.

நம் நாட்டில் விளைச்சல் குறைந்தாலும் கூட காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வெளிநாட்டில் இருந்து வெங்காயத்தை கொண்டு வந்து குறைந்த விலைக்கு விற்பனை செய்தோம். அந்த நிலை தற்போது மாறியுள்ளது. அதனை மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் காங்கிரஸ் சார்பில் மகளிருக்கு பரிசாக வெங்காயம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு உடனடியாக வெங்காய விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இதை செய்துள்ளோம். சங்கராபரணி ஆற்றில் குளிக்க சென்ற இரண்டு வாலிபர்கள் நீரில் மூழ்கி இறந்துவிட்டனர். இதுசம்பந்தமாக காவல்துறை மற்றும் வருவாய்த்துறையிடமிருந்து அறிக்கை கேட்டுள்ளேன். அறிக்கை வந்த பிறகு அவர்களின் குடும்பத்துக்கு அரசின் மூலம் என்னென்ன நிதியுதவி செய்ய முடியுமோ? அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக மணக்குள விநாயகர் கோயிலில் சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, முல்லா வீதியில் உள்ள தர்காவில் துவாவும், ரயில் நிலையம் அருகேவுள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.

Tags : Ministers ,
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...