மரக்காணம் அருகே குண்டும் குழியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம்

மரக்காணம், டிச. 10: மரக்காணம்  அருகே 3 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமான சாலையில்  பொதுமக்கள் நாற்று நட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம்  மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்டது ஆத்திக்குப்பம் கிராமம்.  இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  பெரும்பாலானோர் விவசாயிகள் ஆவர். இங்குள்ள தார் சாலை மூலம் மரக்காணம்,  புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இந்த சாலை கடந்த 3  ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்நிலையில்  தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி சேறும்,  சகதியுமாக உள்ளது.

இந்த தண்ணீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி  பொதுமக்களை கடிப்பதால் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக  அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட  அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சுமார் 100க்கும்  மேற்பட்டோர் நேற்று காலை தண்ணீர் தேங்கி நின்ற சாலையில் நாற்று நடும்  போராட்டம் நடத்தினர். உடனடியாக இந்த சாலையை சரி செய்யாவிட்டால் சாலை மறியல்  உள்ளிட்ட தொடர் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். இதனால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: