₹30 லட்சம் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் புகார்

கள்ளக்குறிச்சி, டிச. 10: கள்ளக்குறிச்சி அருகே செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த பெண்  கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் மீது  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.    

  கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலாவிடம் பாதிக்கப்பட்ட செல்லம்பட்டு கிராம மக்கள் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கூறியதாவது: கள்ளக்குறிச்சி அடுத்த செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் மனைவி சரஸ்வதி என்பவர் அதே கிராமத்தை சேர்ந்தவர்களான அமிர்தவள்ளி, சத்தி, கல்பனா, அன்புமணி, ராஜகுமாரி, கமலா, லட்சுமி, மீனா, கலைச்செல்வி உள்ளிட்ட சுமார் 80 பேர்களிடம் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று தருவதாக கூறி ஆதார் அட்டையை ஒவ்வொருவரிடம் பெற்றுக்கொண்டு கடன் ஏதும் வாங்கி தரவில்லை.

 இந்நிலையில் எங்களது பெயரில் தலா ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை சுமார் 80 பேர்களின் பெயரில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான தொகையை தனியார் நிதி நிறுவனத்தில் கடனாக பெற்று கொண்டு தலைமறைவாகிவிட்டார். ஆனால் நாங்கள் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளதாக கூறி அந்த தனியார் நிதி நிறுவனம் கடன் தொகையை செலுத்த வேண்டி கட்டாயப்படுத்துகின்றனர். எனவே கடன் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள சரஸ்வதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Stories: