×

கார்த்திகை தீப பெருவிழா சிதம்பரத்தில் அகல் விளக்கு, பூக்கள் விற்பனை விறுவிறு

புவனகிரி, டிச. 10: கார்த்திகை தீப பெருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று பொதுமக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவர். தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் கார்த்திகை தீப பெருவிழா பிரசித்தி பெற்றது.
இந்த கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான பொருட்கள் விற்பனை சிதம்பரத்தில் களை கட்டியுள்ளது. தீபத்தன்று அகல்விளக்கு பிரதானமாக இருக்கும். இதனால் அகல் விளக்குகள் சிதம்பரத்தில் அதிக அளவில் விற்பனைக்கு குவிக்கப்பட்டு உள்ளது. சிதம்பரம் நகரின் முக்கிய வீதிகளில் அகல் விளக்குகள் விற்பனை சூடு பிடித்துள்ளது.குறைந்தபட்சமாக ஒரு சிறிய அகல் விளக்கு ரூ.1 முதல் அதிகபட்சமாக பெரிய அகல் விளக்குகள் ரூ.30 வரை விற்கப்படுகிறது. அழகிய மாடல்களில் பல்வேறு வடிவமைப்புகளில் அகல் விளக்குகள் விற்பனைக்கு குவிந்துள்ளது. இதை ஏராளமான பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

இதுபோல் கார்த்திகை தீபத் திருவிழாவில் பொரி மற்றும் அவுல் முக்கிய இடம் பெற்றிருக்கும். விளக்குகளுக்கு பூ வைத்து, தீபம் ஏற்றி, அவுல், பொரி மற்றும் பழங்களை வைத்து பொதுமக்கள் படைப்பர். இதனால் அவுல் மற்றும் பொரி விற்பனையும் சிதம்பரம் நகரில் சூடு பிடித்துள்ளது.இதுபோல் பூஜைக்கு தேவையான சாமந்தி, மல்லிகை, முல்லை, ரோஜா, காட்டுமல்லி, சம்மங்கி போன்ற பல்வேறு பூக்களும் அதிக அளவில் சிதம்பரத்தில் விற்பனைக்கு குவிந்துள்ளது. சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கார்த்திகை தீபத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வதால் வியாபாரம் விறுவிறுப்பு அடைந்து உள்ளது. இதனால் சிதம்பரம் மேலவீதி, தெற்கு வீதி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Tags : Carnatic Deepa Festival ,Chidambaram ,
× RELATED மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ்...