பொருளாதார நெருக்கடி எதிரொலி தொழில் நிறுவனங்கள் டைரி விநியோகத்தை குறைத்தன

திருப்பூர்,டிச.10: திருப்பூரில் தொழில் நிறுவனங்கள் செலவுகளை குறைக்கும் விதத்தில், காலண்டர், டைரி விநியோகிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்டன. வர்த்தக தொடர்புகளை விரிவாக்கம் செய்வதற்காக திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் பல்வேறு வகையில் விளம்பர பணிகளை செய்து வருகின்றனர். தங்கள் வாடிக்கையாளர்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்துக்கொள்வதற்காக ஆண்டுதோறும் காலண்டர், டைரி, கீ செயின்கள் மற்றும் அன்பளிப்பு பொருட்களை வழங்குவது வழக்கம். ஆண்டுதோறும் பின்னலாடை தொழில் நிறுவனங்கள், தினசரி காலண்டர், மாதாந்திர காலண்டர், ஆண்டு காலண்டர், மேசை காலண்டர், பல்வேறு வகையான டைரிக்கள் என ஏராளமான பொருட்களுக்கு பல லட்சம் ரூபாய்களை ஒதுக்கி அன்பளிப்பு பொருட்களை தயாரிக்கின்றன.சிவகாசி, பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் காலண்டர், டைரிக்களை மொத்தமாக அச்சிட்டு வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு வரை காலண்டர் மற்றும் டைரி போன்ற பொருட்களின் விநியோகம் சீராக இருந்தது. 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி சாயப்பட்டறைகள் திருப்பூரில் மூடப்பட்டன. இதனால் அதைத்தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை திருப்பூர் பின்னலாடை தொழில் வீழ்ச்சியடைந்தது. இதைத்தொடர்ந்து காலண்டர், டைரி உற்பத்தி பணிகளும் பாதிக்கப்பட்டன.

தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் இருந்து மீண்டும் திருப்பூர் பின்னலாடை தொழில் துறை சீரான வளர்ச்சியில் சென்றது. வெளிநாட்டு ஏற்றுமதி ஆர்டர்கள் நிறைய கிடைத்ததாலும், பூஜ்ய சதவீத முறையில் சாய கழிவுநீர் சுத்திகரிப்பு செய்ததாலும் பின்னலாடை உற்பத்தி பணிகள் வேகமாக வளர்ச்சி அடையத்தொடங்கின. 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ஏற்றுமதி வர்த்தக மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜி.எஸ்.டி., பணமதிப்பு இழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் தொழில்துறையினர் பல்வேறு விதமான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் இந்த ஆண்டு, பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் காலண்டர், டைரி மற்றும் கீ செயின் விநியோகப்பணிகளை நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து திருப்பூர் தொழில் துறையினர் கூறியதாவது: 2016ம் ஆண்டு இறுதியில், பணமதிப்பு இழப்பு, 2017ம் ஆண்டில், ஜி.எஸ்.டி., உள்ளிட்ட பிரச்னைகளால் தொழிலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையால், ஏராளமான சிறு, குறு நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளது. ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து தொழிலை நடத்தி வருகின்றன. இதனால் செலவுகளை குறைக்கும் விதத்தில், 2020ம் ஆண்டிற்கான தினசரி காலண்டர், மாதாந்திர காலண்டர், டைரிகளை விநியோகிக்கும் பணியை பெரும்பாலான நிறுவனத்தினர் குறைத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: