×

மாநகரில் 14 வார்டுகளில் குப்பை அள்ளும் பணி தீவிரம்

திருப்பூர், டிச.10: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குப்பை அள்ளும் பணியை தனியார் நிறுவனத்திடமிருந்து பெற்று, மீண்டும் மாநகராட்சி நிர்வாகமே, பணியாற்ற துவங்கியது.திருப்பூர் மாநகராட்சியில் தற்போது 60 வார்டுகள் உள்ளன. இந்த 60 வார்டுகளிலும் உள்ள வீடுகள், பின்னலாடை தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வியாபார நிறுவனங்களில் இருந்து தினமும் சுமார் 540 டன் குப்பை சேகரமாகிறது. ஆனால் போதுமான துப்புரவு தொழிலாளர்கள் இல்லை. இதை சரிக்கட்ட கடந்த 2014ம் ஆண்டு 2வது மற்றும் 3வது மண்டலங்களுக்கு உட்பட்ட 16வது வார்டு முதல் 45வது வார்டு வரை உள்ள 30 வார்டுகளில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு விடப்பட்டது. ஆனால், முழுமையான அளவு குப்பைகளை அள்ளப்படவில்லை. குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் தேங்கி வந்த நிலையில், ரோட்டிலும் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு, மலைபோல் தேங்கி, கடும் சுகாதாரக்ேகடு ஏற்பட்டு வந்தது.  இதுகுறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் புகார் எழுந்து வந்தது. பல இடங்களில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் வருகிற 15ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இதன் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. துப்புரவு பணியை மாநகராட்சி நிர்வாகமே மீண்டும் மேற்கொள்ள முடிவு செய்து, அப்பணியை நேற்று முதல் துவக்கியது.

அதன்படி முதல் கட்டமாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் உத்தரவின் பேரில், 2வது மண்டல உதவி கமிஷனர் (பொறுப்பு) ஆறுமுகம் முன்னிலையில் 2வது மண்டலத்துக்கு உட்பட்ட 16, 17, 18, 19, 20, 21, 30 ஆகிய 7 வார்டுகளில் இப்பணி நேற்று தொடங்கப்பட்டது. இதில், 172 மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் 15 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.  இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட 30 வார்டுகளில், முதல் கட்டமாக 2வது மண்டலத்தில் 7 வார்டுகளும், 3வது மண்டலத்தில் 7 வார்டுகளும் என மொத்தம் 14 வார்டுகள் திரும்ப பெறப்பட்டு, துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் அறியும் வகையில், 14 வார்டுகளிலும் மைக் மூலம் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து வருகிற 16ம் தேதி முதல் மீதம் உள்ள 16 வார்டுகளும் தனியாரிடமிருந்து திரும்ப ெபறப்பட்டு, மாநகராட்சி மூலம் துப்புரவு பணி நேரிடையாக மேற்கொள்ளப்படும்,’’ என்றனர்.

Tags : city ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து...