×

வேளாண்துறை சார்பில் பயிர் சாகுபடி குறித்து முறையான ஆலோசனை இல்லை

திருப்பூர்,டிச.10: திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் சிறிது நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில் பயிர் சாகுபடி குறித்து வேளாண்மைத்துறை முறையான ஆலோசனைகள் இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை, தாராபுரம், காங்கயம், பல்லடம், அவிநாசி ஆகிய பகுதிகள் விவசாயம் சார்ந்த பகுதியாக இருப்பதால் கடந்த சில மாதங்களாக பெய்த கன மழையால் வானம் பார்த்த பூமியாக காய்ந்திருந்து நிலப்பகுதிகள்  அனைத்தும் மழை நீரில் நனைந்து பல்வேறு செடிகள் வளர்ந்து பசுமையாக உள்ளது. அமராவதி, திருமூர்த்தி ஆகிய அணைகள் நிறைந்துள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு அணைகள் நிறைந்து பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குளம். குட்டைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. பாசன கால்வாய் பகுதிகளில் நெல், கரும்பு, தக்காளி, மக்காச்சோளம், கம்பு, சோளம், சூரியகாந்தி, கடலை உட்பட பல்வேறு தானிய வகைகளை பயிரிட்டுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து, மாவட்டத்தில் உள்ள, அணைகள் நிரம்பியதால், விவசாயிகள் நெல் சாகுபடியை துவக்கியுள்ளனர். மாவட்டத்தில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப பயிர் செய்யவேண்டிய விதைகள் குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் வேளாண் துணை இயக்குனர் அலுவலர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் பல்வேறு கிராமங்களுக்கு சென்று மண் பரிசோதனை செய்து மண்ணிற்கு ஏற்ற பயிர் ரகம், உரம், பூச்சி மருந்து, தண்ணீர் தேவை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கவேண்டும். ஒவ்வொரு ஒன்றியங்களிலும் விவசாயிகளை அழைத்து பயிர் சாகுபடி குறித்தும், அரசு வழங்கும் விதைகள், உரம், பூச்சி மருந்து, டீசல் உட்பட பல்வேறு சலுகைகள் குறித்து தெரியப்படுத்த வேண்டும். 13 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள வேளாண் துணை இயக்குனர் அலுவலர் இருந்தும் விவசாயிகளுக்கு முறையான ஆலோசனைகள் இல்லாததால் கவலையடைந்துள்ளனர்.இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் காளிமுத்து கூறியதாவது:- மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ந்துள்ளது. மாவட்ட வேளாண் துறை இயக்குனரின் கட்டுப்பாட்டில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படும் வேளாண்மைத்துறை துணை இயக்குனர் அலுவலர் கட்டுப்பாட்டில் 30க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர்.

இவர்கள் விவசாயிகளுக்கு பருவத்திற்கு ஏற்ற பயிர் வகைகள் நடவு குறித்தும், மத்திய மாநில அரசுகள் வழங்கும் மானிய விலையில் விதைகள், உரம், பூச்சி மருந்து, டிராக்டர் உட்பட பல்வேறு சலுகைகள் குறித்தும் தெரிவிப்பது இல்லை. விவசாயிகளை அழைத்து ஆலோசனைக்கூட்டம் நடத்துவதும் இல்லை. இதனால், விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் தெரியாமல் தனியார் விதை, பூச்சி மருந்து கடைகளில் பொருட்கள் வாங்கி பொருளாதார ரீதியாக பாதிப்படைக்கின்றனர். மாவட்ட கலெக்டர் ஒவ்வொரு ஒன்றியங்களிலும் வேளாண் துணை இயக்குனர் அலுவலர் முகாம் அமைத்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் செய்திகள், புகைப்படத்துடன் நாளிதழ்களில் வருகிறதா? என்பதை கண்காணித்து களப்பணி ஆற்றாத அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Department of Agriculture ,
× RELATED நாட்டுப் பசுவில் நன்மைகள் அதிகம்: வேளாண்துறை தகவல்