மயானத்திற்கு பாதை ஏற்படுத்தி தரக் கோரி மனு

திருப்பூர் டிச.10: திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த ஆதிதிராவிடர் காலனி பகுதியில் மயானத்திற்கு பாதை வசதி ஏற்படுத்தி தரக்கோரி அப்பகுதி மக்கள் நேற்று 2-ம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு உதவி கமிஷனர் (பொ) ஆறுமுகத்தை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, போயம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் 100-க்கும் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதி மக்களுக்கு தேவாத்தா கோவிலில் இருந்து கஞ்சம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலையம் அருகே மயானம் உள்ளது. தலைமுறை தலைமுறையாக எங்கள் பகுதியில் இறப்பவர்களின் உடல்களை அந்த சுடுகாட்டில்தான் அடக்கம் செய்து வருகிறோம். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் பாலம் கட்டும் பணியின் போது மயானத்திற்கு செல்லும் பாதையில் இருந்த மண் தோண்டப்பட்டு, அங்கு பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளம் மூடப்படாமல் உள்ளதால் மயானத்திற்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது யாரும் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் மயானத்திற்கு மீண்டும் பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்று கொண்ட ஆறுமுகம் விரைவில் மயானத்திற்கு பாதை வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று உறுதியளித்தார். இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: