×

புதுமார்க்கெட் வீதியில் வாகன நெரிசலில் சிக்கி திணறும் மக்கள்

திருப்பூர்,டிச.10:திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில், துணி, எலக்ட்ரானிக், ஜூவல்லரி, வீட்டு உபயோக பொருள் என பலவித கடைகள் இருப்பதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வருவோர், உள்ளே செல்வோர் மட்டுமின்றி, காமாட்சியம்மன் கோவில் வீதி, குப்பண்ணா செட்டியார் வீதி, ஜம்மனை பள்ளம் பகுதியில் இருப்போரும், வாகனங்களில் இதே வீதிக்கு வருவதால், பாதசாரிகளுக்கு வழிவிட கூட இடமில்லாத சூழல் நிலவுகிறது. புதுமார்க்கெட் வீதியில் இவ்வளவு இடநெருக்கடி இருக்கும் சூழ்நிலையில், ஏராளமான தெருவோர கடைகளும் முளைத்துள்ளன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக போலீசாரின் கண்காணிப்பு இல்லாததால், இருசக்கர வாகனங்களில் வருவோர் ஒரு வழிப்பாதையில் செல்வது அதிகரித்துள்ளது. இதுனால் மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.  இதேபோல் பஸ் டிரைவர்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பஸ் ஸ்டாண்டில் இருந்து, மாநகராட்சி வருவதற்கு சுமார் 20 நிமிடங்கள் வரை ஆகிறது. புதுமார்க்கெட் வீதியில் இவ்வளவு இடநெருக்கடி இருக்கும் சூழ்நிலையில், மாநகராட்சி அதிகாரிகளும், போக்குவரத்து போலீசாரும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Newmarket Road ,
× RELATED காங்கயம் அருகே சாலையோரம் புதரில் திடீர் தீ