×

சில்ஹல்லா ஆற்றின் குறுக்கே 1000 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம்

ஊட்டி,  டிச. 10: நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் சில்ஹல்லா ஆற்றின் குறுக்கே  1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் நீர் மின் நிலையங்கள் அமைப்பதற்கான  திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு தமிழ்நாடு மின் வாரியம் சமர்பித்துள்ளது.  நீலகிரி  மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுக்கு முன் காமராஜர் ஆட்சி காலத்தின்போது,  ஏராளமான அணைகள் மற்றும் நீர் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இந்த நீர்  மின் நிலையங்களில் இருந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு மாநிலம் முழுவதும்  மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. மிகவும் செலவு குறைந்த இந்த நீர் மின்  திட்டங்கள் துவக்க காலத்தில் முக்கிய நீர் மின் திட்டங்களாக இருந்தன.  குறிப்பாக, குந்தா நீர் மின் திட்டங்களே தமிழகத்தின் முக்கிய நீர் மின்  திட்டமாக இருந்தது. பிற்காலத்தில் அணு, அனல் மின் நிலையங்கள் மற்றும்  காற்றாலை மின் நிலையங்கள் வந்தவுடன் இவைகள் ‘பேக் அப்’ மின் நிலையங்களாக  மாற்றப்பட்டன. அதவாது, மின் தேவை அதிகமாக இருக்கும் ‘பீக் அவர்ஸ்’ எனப்படும் காலை மற்றும் மாலை  நேரங்களில் 6 மணி நேரம் மட்டுமே இந்த நீர் மின்  நிலையங்கள் இயக்கப்படுகிறது.

 மேலும் அனல், காற்றாலை போன்ற மின் நிலையங்களில்  பழுது ஏற்பட்டால், இந்த நீர் மின் நிலையங்களில் (குந்தா, கெத்தை, அவலாஞ்சி,  பில்லூர், பரளி மற்றும் சிங்காரா) மின் நிலையங்கள் இயக்கப்பட்டு மின்  தேவையை சீர் செய்யப்படுகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்த  மின் நிலையங்கள் மூலம் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த 7 ஆண்டுக்கு முன் தமிழகத்தில் மின்  தட்டுப்பாடு அதிகரித்தபோது புதிய மின் திட்டங்கள் உருவாக்க வேண்டும். என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதனால்,  அப்போது தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா நீலகிரி மாவட்டத்தில்  சில்ஹால்லாவில்  1000  மெகாவாட் நீர் மின் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.   ஆனால், இந்த மின்  திட்டம் நிறைவேற்றப்படுமா? என்ற சந்தேகம் எழுந்து. காரணம் மத்திய  சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்குமா? என்ற கேள்வி  எழுந்தது. இதனால், கடந்த 7 ஆண்டுகளாக இத்திட்டம் துவக்கப்படாமல் இருந்தது.  முதல் கட்ட நடவடிக்கையாக இடம் தேர்வு, சர்வே போன்ற பணிகள் கூட கடந்த பல ஆண்டுகளாக  துவக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தமிழக மின் வாரியம் தற்போது  இத்திட்டம் துவங்குவதற்காக ஆயத்த பணியில் இறங்கியுள்ளது. மேலும்,  இத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது குந்தா அருகே  அன்னமலை கோயில் அடிவாரத்திலும் மற்றும் ஸ்ரீராம் நகர் (எடக்காடு - மந்தை  இடையே) உள்ள இரு இடங்களிலும் அணைகள் கட்டப்படுகிறது. மேலும், இது நீர் மின்  நிலையமாக இன்றி நீரேற்று குகை மின் நிலையமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.4  ஆயிரத்து 200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 இந்த மின்  நிலையம் மஞ்சூரில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் மெரிலேண்டு பகுதியில்  மலையை குடைந்து சுமார் 5 கி.மீ. முதல் 10 கி.மீ. ெதாலைவிலும், கடல்  மட்டத்திற்கு மேல் 1500 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்படவுள்ளது. இதில், 250  மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய நான்கு டர்பின்கள் உருவாக்கப்பட்டு, 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இந்த மின்  நிலையம் அமைப்பதற்கான துவக்கப்பணிகள் தற்போது துவங்கியுள்ளது. இற்காக சர்வே  பணிகள் முடிந்த நிலையில் திட்டம் குறித்த முழு அறிக்கையை மத்திய மின்  வாரியத்திடம் தமிழ்நாடு மின்சார வாரியம் சமர்பித்துள்ளது. மேலும், மத்திய  சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடமும் மின்திட்டம் குறித்த  அறிக்கையை தமிழ்நாடு மின்சார வாரியம் கொடுத்துள்ளது. இந்நிலையில், கடந்த  ஒரு வாரமாக நீலகிரி மாவட்டம் குந்தாவில், மத்திய சுற்றுச்சூழல் துறை  அதிகாரிகள் குழு மின் நிலையம் அமையவுள்ள இடங்களில் ஆய்வு  மேற்கொண்டனர்.

 இந்த குழுவினர் எமரால்டு, குந்தா, பிகிலி பள்ளம், அன்னமலை  கோயில் அடிவாரம் என நீர் மின் நிலையம் அமையும் இடம், அணைகள்  கட்டப்படவுள்ள பகுதிகளில் ஆய்வு செய்தனர். அணை மற்றும் நீர் மின் நிலையம்  கட்டுவதற்காக குந்தா பகுதியில் மொத்தம் 777 ஏக்கர் நிலம்  கையகப்படுத்தப்படவுள்ளது. இதில், 445 ஏக்கர் நிலம் வனம் மற்றும் அரசு  நிலமும், மீதமுள்ள பகுதி தனியார் நிலமாகும். மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன்  உடனடியாக மின் நிலையம் மற்றும் அணை கட்டுவதற்கான பணிகளை துவக்க மின் வாரியம்  முடிவு செய்துள்ளது. மேலும், இந்த மின் நிலையம் அமைக்கும் பணிகள் நவீன  தொழில் நுட்பங்களுடன் மேற்கொள்ளப்படும் எனவும், குறைந்த காலத்தில், அதாவது 5  ஆண்டுகளுக்குள் இரு அணைகள் மற்றும் ஒரு குகை மின் நிலையம் அமைக்கப்படும் என  அதிகாரிகள் தெரிவித்தனர். உற்பத்தி 1000 மெகாவாட், தண்ணீர் உறிஞ்ச 1200 மெகாவாட் செலவு: இத்திட்டத்தில் நாள் ஒன்றுக்கு நான்கு டர்பின்கள் மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி துவக்கப்படும். அதவாவது பீக் அவர்ஸ் எனப்படும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த மின் நிலையம் இயக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள கிரிடிற்கு 1000 மெகாவாட் மின்சாரத்தை வழங்கும். இதன் மூலம் பீக் அவர்சில் ஏற்படும் மின் தட்டுப்பாடு மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யப்படும்.

மீண்டும் பகல் நேரத்தில் மின் தேவை மிகவும் குறைந்த மதிய நேரத்தில் 1200 மெகாவாட் மின்சாரத்தை பயன்படுத்தி ராட்சத மோட்டார்கள் இயக்கப்பட்டு இந்த தண்ணீர் குழாய்கள் மூலம் மீண்டும் மேல் பகுதியில் உள்ள அணைக்கு அதாவது அன்னமலை அடிவாரத்தில் இருந்து ஸ்ரீராம் நகர் பகுதியில் அமையவுள்ள அணைக்கு கொண்டுச் செல்லப்படும். உற்பத்தியை விட, அதிக மின் செலவு ஏற்படுகிறதே என பலரும் நினைத்தாலும், இத்திட்டத்தின் நோக்கம் பீக் அவர்ஸ் எனப்படும் மின் தேவை அதிகம் தேவைப்படும் சமயங்களில் மின் தட்டுப்பாட்டை போக்குவதே என மின் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: இதுேபான்று மலைப்பகுதிகளில் மின் நிலையம் அமைக்க 10 மத்திய துறையினரிடம் அனுமதி பெறவேண்டியுள்ளது. இதற்காக தனியார் அமைப்பின் திட்ட மதிப்பீடு மற்றும் முழுமையான திட்டம் குறித்த அறிக்கையை தயார் செய்யும் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 2020ம் ஆண்டு இறுதியில் இதற்கான முழு திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடிக்கப்பட்டு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும். இத்திட்டத்திற்கான செலவு அதிகமாக இருந்தாலும், மின் உற்பத்தி துவக்கிய பின், மின் வாரியத்திற்கு செலவு மிகவும் குறையும். இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் மின் வாரியத்தில் எதிர்காலத்தில் ஏற்படும் மின்சார தட்டுப்பாட்டை முழுமையாக போக்க முடியும், என்றனர்.

Tags : Silhalla River ,
× RELATED சில்ஹல்லா ஆற்றின் குறுக்கே 1000 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம்