×

மாவட்டத்தில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்

ஊட்டி, டிச. 10: நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி ஒன்றியங்களில் முதல் கட்டமாகவும், ஊட்டி, கூடலூர் ஒன்றியங்களில் இரண்டாம் கட்டமாகவும் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது: 6 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 59 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 35 கிராம ஊராட்சி தலைவர்கள், 393 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் முதல் கட்டமாக குன்னூர், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 177 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 17 கிராம ஊராட்சி தலைவர், 22 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு வரும் 27ம் தேதி நடக்கிறது. இரண்டாம் கட்டமாக ஊட்டி, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 216 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 18 கிராம ஊராட்சி தலைவர், 37 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் 4 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு வரும் 30ம் தேதி நடக்கிறது.

 இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் வரும் 16ம் தேதி வரை நடக்கிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்கள் பெறப்படும். வேட்புமனுக்கள் 17ம் தேதி காலை 10 மணி முதல் பரிசீலனை செய்யப்படும். 19ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி காலை 8 மணிக்கு துவங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு வரும் ஜனவரி 6ம் தேதி நடைபெறும். தொடர்ந்து 11ம் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் ஆகியோரை தேர்வு செய்ய மறைமுக தேர்தல் நடக்கிறது. இவ்வாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Tags : phase ,Elections ,district ,
× RELATED மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு..!!