×

வெளி மாநில காலிபிளவர் வரத்து அதிகரிப்பு

ஊட்டி, டிச. 10: வெளிமாநில காலிபிளவர் ஊட்டிக்கு விற்பனைக்கு வந்துள்ளதால், குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  நீலகிரி  மாவட்டத்தில் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ்  மற்றும் காலிபிளவர் போன்ற மலைப் பயிர்கள் பயிரிடப்படுகிறது. தற்போது,  காலிபிளவர் அதிகளவு பயிரிடப்படுவதில்லை. பராமரிப்பு செலவு மற்றும் பணிகள்  அதிகம் என்பதால் குறைந்தளவே நீலகிரியில் பயிரிடப்படுகிறது. ஆனால், கொடைக்கானல், கர்நாடகா போன்ற பகுதிகளிலும் காலிபிளவர்  அதிகளவு பயிரிடப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படும் காலி  பிளவர்களை விட, ஊட்டியில் விளையும் காலி பிளவருக்கு சுவை சற்று அதிகம்  என்பதால், அதிக விலைக்கு விற்கப்படும். இதனையே பெரும்பாலானவர்கள்  விரும்பி வாங்கிச் செல்வது வழக்கம் ஆனால், சில சமயங்களில் கர்நாடக மாநிலத்தில் இருந்து  கொண்டு வரப்படும் காலி பிளவர்களால், இங்கு விளையும் காலி பிளவர்களின்  விலை சரிவடைவது வாடிக்கையாக உள்ளது. தற்போது கர்நாடக மாநிலத்தில்  காலி பிளவர் மகசூல் அதிகரித்துள்ளதால், ஊட்டிக்கு அதிகளவு கொண்டு  வரப்பட்டுள்ளன.

பெரும்பாலான சில்லரை வியாபாரிகள் சாலையோரங்களிலும், தள்ளுவண்டிகளிலும் வைத்து விற்பனை செய்கின்றனர். ஒரு காலிபிளவர் தற்போது ரூ.20  முதல் ரூ.30க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. சாதாரணமாக காலி பிளவர்  ரூ.50 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படும். குறைந்த விலைக்கு விற்பனை  செய்யப்படுவதால், இதனை பெரும்பாலான மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.  மேலும் ஊட்டி ஓட்டல்களில் தற்போது சாம்பார்களிலும்,  பொறியலிலும் காலிபிளவர் அதிகமாக காணப்படுகிறது.வெளி மாநிலத்தில் இருந்து  கொண்டு வந்து விற்பனை செய்யப்படும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில்  விளையும் காலி பிளவரின் விலையும் சரிந்து, இதே விலைக்கு விற்பனை செய்ய  
வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.


Tags :
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்