சமூக விரோதிகளின் கூடாரமான சிறுவர்கள் பூங்கா மாநகராட்சி சீரமைப்பு

கோவை, டிச. 10:  கோவை அருகே சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த நவம்பர் 24ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. தற்போது அந்த பூங்காவில் உள்ள மதுபாட்டில்கள் அகற்றப்பட்டு மக்கள் பயன்பட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கோவை அடுத்த வீரகேரளம் அருகே உள்ள கரிமலையம்பாைளயத்தில் கோவை மாநகராட்சியின் சார்பில் சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் போன்ற பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியை சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்த பின்பு இந்த பூங்காவில் விளையாடுவது வழக்கம்.

இந்நிலையில் சமீப காலமாக இரவு நேரத்தில் அத்துமீறி உள்ளே நுழையும் சமூக விரோதிகள் சிலர் உள்ளே அமர்ந்து மது அருந்துகின்றனர்.

பின்னர் செல்லும்போது பாட்டில்களை உடைத்துவிட்டு போட்டு சென்று விடுகின்றனர். இதனால் அங்கு எங்கு பார்த்தாலும் மதுபாட்டில்கள், பீடி, சிகரெட் போன்றவை நிறைந்து கிடந்தன. எனவே காவலாளியை நியமித்து சிறுவர் பூங்காவை கண்காணிக்க வேண்டும் எனவும், முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த செய்தி தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு சமூக விரோதிகள் இரவு நேரங்களில் சிறுவர் பூங்காவிற்குள் நுழையாத அளவிற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும் பூங்காவிற்கு காவலாளி நியமிக்கப்படவில்லை, விரைந்து காவலாளி நியமனம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: