×

கோபி அருகே திருமணமானதும் இளம்ஜோடி மாட்டு வண்டியில் ஊர்வலம்

கோபி, டிச.10: கோபி அருகே மாட்டு வண்டியில் பயணம் செய்து இளம்ஜோடி பாரம்பரிய முறையில் திருமணம் செய்து அசத்தினர். கோபி அருகே உள்ள அளுக்குளி செல்லாண்டியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் நடந்த பட்டதாரி மணமக்களின் இந்த திருமணம் பாரம்பரிய முறையிலும், கலாசாரத்தை நினைவு கூறும் வகையிலும் இருந்தது.சேலம் மாவட்டம் எடப்பாடி ஆவணியூர் மேல்முகம் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன்-வனஜா தம்பதியின் மகன் ஜெயக்குமார். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கோபி அருகே உள்ள போடி சின்னாம்பாளையத்தை சேர்ந்த சின்னசாமி - பூங்கோதை தம்பதியின் மகள் வைஷ்ணவி, பி.எஸ்சி., ஐ.டி.  பட்டதாரி. இவர்களது திருமணம் கோபி அருகே உள்ள அளுக்குளி செல்லாண்டியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. திருமணம் முடிந்து மணமக்களை பெண் வீட்டிற்கு அலங்காரம் செய்யப்பட்ட மாட்டு வண்டியில் அழைத்துச் சென்றனர். மணமக்கள் சென்ற மாட்டு வண்டியின் பின்னால் உறவினர்கள், நண்பர்கள் படைசூழ சென்றனர்.

மாட்டு வண்டியில் சென்ற மணமக்களை வழிநெடுகிலும் உள்ள கிராமமக்கள் பார்த்து வியப்படைந்து வாழ்த்தினர்.  மணமக்களை அழைத்து செல்ல அலங்காரம் செய்யப்பட்ட சொகுசு கார்களை பயன்படுத்தி வரும் இந்த காலத்தில் மாட்டு வண்டியில் மணமக்கள் சென்றதை சாலையில் சென்றவர்கள் வியப்புடன் பார்த்தனர்.  மணமக்கள் இருவரும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்களுக்கு நடந்த  திருமணத்தைபோல் தாங்களும் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டதாகவும், பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை வரும் தலைமுறையினருக்கு எடுத்துச்சொல்லவும், இது விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதாலும் மாட்டு வண்டியில் சென்றதாக தெரிவித்தனர்.

Tags : couples ,Gopi ,
× RELATED காதல் ஜோடிகள் போலீசில் தஞ்சம்