பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் வசதி

கோவை, டிச. 10:   கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறுநீரகம் செயலிழந்த நபர்களுக்கு வாரம் இரண்டு முறை ரத்தசுத்திகரிப்பு ‘டயாலிசிஸ்’ சிகிச்சை மேற்கொள்வது அவசியம். ஒரு வருக்கு டயாலிசிஸ் செய்ய குறைந்தது 4 மணி நேரம் தேவைப்படுகிறது. இந்த சிகிச்சை பெற தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் செலவாகிறது. அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக டயாலிசிஸ் செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில் கோவை அரசு மருத்துவமனை மட்டுமின்றி பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் வசதி இருக்கிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “கோவை அரசு மருத்துவமனையில் 25 டயாலிசிஸ் கருவிகள் இருக்கிறது. இதன் மூலம் மாதத்திற்கு 900 பேர் வரை டயாலிசிஸ் செய்யப்படுகிறது. பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் வருகின்றனர். ஆனால், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகளில் 6 கருவிகள் வரை இருக்கிறது. எனவே, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் இந்த மருத்துவமனைகளில் தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தை பயன்படுத்தி இலவசமாக சிகிச்சை பெறலாம்” என்றார்.

Related Stories: