கோவை மாவட்ட அரசு பள்ளிகளில் அடிப்படை வசதியில்லை

கோவை,டிச.10: கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கட்டிட பராமரிப்பு, தூய்மை பணி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி தமிழக பள்ளிக்கல்வி ஆணையரிடம் பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கத்தினர் மனு அளித்தனர். கோவை மண்டலத்திற்குட்பட்ட ஆசிரியர்களுடான கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் கோவை, திருப்பூர், நீலகிரி,ஈரோடு மாவட்டங்களிலிருந்து 20 தலைமையாசிரியர்கள், 20 ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற பள்ளி கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன், நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் எவ்வாறு உள்ளது, மாணவர்கள் புரிந்துகொள்கின்றனரா என்பது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டார். மேலும் தலைமையாசிரியர்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது பள்ளி மேலாண்மை குழு செயல்படும் விதம் குறித்து கேட்டறிந்தார். பள்ளி கல்வி அலுவலர்களுடனான கலந்துரையாடலின் போது, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின் கல்வி தரம் எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிய நடத்தப்பட்ட திறனறிவு தேர்வு அறிக்கைகள், மாவட்ட வாரியான தேர்ச்சி சதவீதம், கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார். அத்தோடு, அனைத்து பள்ளிகளையும் தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, மாநில பள்ளி கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யனை சந்தித்தது பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டிப்பதாவது, கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் உள்ளாட்சிகளின் பராமரிப்பில் உள்ள துவக்க பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை உள்ள பெரும்பாலான பள்ளிகளில் உள்ள கட்டிடங்கள் பராமரிப்பின்றி உள்ளது. பள்ளிகளில் தூய்மைப்படுத்தும் பணியாளர்கள் இல்லாததால் பள்ளி வளாகம் குப்பை மேடாகவும், விளையாட்டு மைதானங்கள் புதர் மண்டியும் உள்ளன. அதேபோல வெளிச்சுவர்கள் பாதுகாப்பின்றி உள்ளது. குடிநீர் தொட்டிகள் தூய்மையற்ற நிலையிலும், சத்துணவு சமையலறை, உணவுக்கூடம் போன்ற இடங்களில் கழிவுநீர் குழாய் இல்லாமலும் உள்ளன. போதுமான கழிப்பறை வசதி, கழிவறைகளில் நாப்கின், இன்சிரேட்டர், மின் இணைப்பு ஆகியவை இல்லாத நிலையிலேயே பெரும்பாலான பள்ளிகள் இருக்கின்றன. பள்ளிகளில் போதுமான அடிப்படை வசதிகள் மற்றும் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: