வாட்ஸ் அப் குழு மூலம் கோவை கிராமப்புறங்களில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைக்க நடவடிக்கை

கோவை, டிச. 10:  கோவை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவத்தின் போது ஏற்படும் தாய், சேய் இறப்பு விகிதம் குறைக்க வாட்ஸ் ஆப் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பிரசவத்தின் போது ஏற்படும் தாய்,சேய் உயிரிழப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. தமிழகத்தில் பிரசவத்தின் போது ஏற்படும் தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இதனை பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்த சோகை, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றிக்கு உரிய சிகிச்சை பெறாததால் பிரசவத்தின் போது இறப்பு ஏற்படுகிறது என கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில் அரசு, தனியார் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்டிற்கு 49 ஆயிரம் குழந்தைகள் வரை பிறக்கிறது. இதில், பிரசவத்தின் போது தாய், சேய் இறப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க மாவட்ட அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 12 குழுக்கள், நகர்புறத்தில் 5 குழுக்கள் என மொத்தம் 17 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர், துணை இயக்குனர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளனர்.

இந்த குழு அடங்கிய வாட்ஸ் அப் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ் அப் குழுவிற்கு அரசு மருத்துவர் ஆலோசகராக இருப்பார். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணிகளின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு இதய பாதிப்பு, ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பற்றிய முழு அறிக்கை வாட்ஸ் அப் மூலம் ஆலோசகருக்கு அளிக்கப்படும். பின்னர், கர்ப்பிணிக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை குறித்து தெரிவிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்க வசதி இல்லை என்றால், கர்ப்பிணிகள் உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவார்கள். மேலும், ஆரம்பத்தில் இருந்தே கர்ப்பிணிகள் கண்காணிக்கப்படுவதால் பிரசவத்தின் போது ஏற்படும் தாய், சேய் இறப்பு தடுக்கப்படும் என சுகாதாரத்துறையின் தெரிவித்துள்ளனர். இது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் தாய்,சேய் இறப்பு விகிதம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகள் குறித்த தகவல், அளிக்கப்படும் சிகிச்சை குறித்து தெரிந்து கொள்ள வாட்ஸ் அப் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுவின் மூலம் கர்ப்பிணிகளின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும். ஆபத்தான கர்ப்பிணிகள் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு உயர் சிகிச்சை, மருத்துவர் ஆலோசனையின்படி அளிக்கப்படும். கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி முறையாக கிடைக்கிறதா என ஆய்வு செய்யப்படும். வீடுகளில் பிரசவம் பார்ப்பது தொடர்பாக கண்காணிக்கப்படும். இது தொடர்பாக ஏற்படும் பிரச்னைகள் குறித்து கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,’’ என்றார்.

Related Stories: