காட்டு யானைகளை விரட்ட தேனீ வேலி அமைக்கும் திட்டம்

கோவை, டிச. 10:  கோவை மாவட்டத்தில் தேனீக்கள் மூலம் வேலி அமைத்து யானையை விரட்டும் திட்டத்திற்காக 200 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோவை வனக்கோட்டம் கோவை, போளூவாம்பட்டி, மதுக்கரை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை மற்றும் மேட்டுப்பாளையம் என 7 வனச்சரகமாக உள்ளது. இந்த வனத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன. காட்டுயானைகளின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது. யானைகள் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து விவசாய நிலம், வீடுகளை நாசம் செய்கிறது. 120கி.மீ வன எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சுமார் 110 கிராமங்களில் மனித-யானை மோதல் நடக்கிறது.  இதை தடுக்க அகழி அமைத்தல், சோலார் மின் வேலி அமைத்தல் உள்பட பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், யானைகள் அகழியை கடந்து, சோலார் மின் வேலியில் அருகில் உள்ள மரங்களை உடைத்து போட்டு நாசம் செய்து விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்கிறது.

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க தேனீயை பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் செலவு குறைவு என்பதாலும், இயற்கை சூழலுக்கு ஏற்றது என்பதால் தமிழகத்தில் செயல்படுத்த அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் ரூ.1.28 கோடி செலவில் தேனீக்கள் மூலம் யானையை விரட்ட புதிய திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விவசாய நிலங்களை சுற்றி போடப்பட்டுள்ள சோலார் மின்வேலியின் அருகில் குறிப்பிட்ட இடைவெளியில் மரப்பெட்டிகளில் தேன் கூடுகளை அமைத்து தேனீக்களை வளர்க்க வேண்டும். இந்த தேனீக்களின் ரீங்கார ஒலிகேட்டு யானைகள் அருகில் செல்லாது. இதனால், யானைகள் ஊருக்குள் நுழையாது. பயிர் சேதம், மனித-யானை மோதல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக, மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் உள்ள 200 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனபாதுகாவலர் தெபாசிஸ் ஜனா கூறுகையில், ‘‘தேனீக்கள் மூலம் யானையை விரட்டும் முறை ஆப்பிரிக்க நாட்டில் வெற்றி பெற்றுள்ளது. இதை கோவை மாவட்டத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, 200 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விரைவில் தேனீக்கள், மரப்பெட்டிகள் வழங்கப்படும். இம்முறை தொடர்பாக இம்மாத இறுதியில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ளது,’’ என்றார்.

Related Stories: