பெருந்துறை, சென்னிமலையில் வார்டு உறுப்பினர்களுக்கு 14 பேர் வேட்புமனு தாக்கல்

பெருந்துறை, டிச.10: பெருந்துறை, சென்னிமலை ஒன்றியங்களில் வார்டு உறுப்பினர்களுக்கு மட்டும் 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் சென்னிமலை ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று முதல் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற அதிகாரிகள் ஆயத்தமாகினர். நேற்று மாலை 5 மணி வரை இரண்டு ஒன்றியங்களிலும் கிராம ஊராட்சி வார்டுகளுக்கு மட்டும் மொத்தம் 14 மனுக்கள் பெறப்பட்டது. ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை. பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 29 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 228 வார்டுகள் உள்ளன. இதுதவிர, ஒன்றியத்தில் 12 கவுன்சில் வார்டுகளும், 2 மாவட்ட கவுன்சில் வார்டுகளும் உள்ளது.

இந்த 29 கிராம ஊராட்சிகளிலும் 31,217 ஆண்களும், 33 ஆயிரத்து 172 பெண்களும் என மொத்தம் 64,979 பேர் வாக்களிக்க உள்ளனர். நேற்று சீனாபுரம் ஊராட்சி 5 வார்டில் ஒரு வேட்புமனுவும், துடுப்பதி ஊராட்சி 2,3,9,12 ஆகிய வார்டுகளில் தலா ஒரு வேட்பு மனுவும், மூங்கில்பாளையம் ஊராட்சியில் 7வது வார்டுக்கு ஒரு வேட்பாளரும், பாப்பம்பாளையம் ஊராட்சியில் 5வது வார்டுக்கு ஒரு வேட்புமனுவும் மொத்தம் ஏழு வேட்புமனுக்கள் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் பெறப்பட்டுள்ளது. இதேபோல், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 22 ஊராட்சிகள் உள்ளன. இங்கு 197 வார்டுகள் உள்ளன. இது 12 ஊராட்சி கவுன்சில் வார்டுகளையும், 2 மாவட்ட கவுன்சில் வார்டுகளையும் உள்ளடக்கியது.இங்கு 38,135 ஆண்களும், 39, 772 பெண்களும், இதர வகுப்பினர் 4 பேர் என மொத்தம் 78,016 பேர் வாக்களிக்க உள்ளனர். சென்னிமலை ஒன்றியத்தில் நேற்று கவுண்டச்சிபாளையம் ஊராட்சியில் 4 வார்டில் ஒரு வேட்புமனுவும், முருங்கத்தொழுவு ஊராட்சியில் 3, 11 வார்டுகளில் தலா ஒரு வேட்பு மனுவும், புதுப்பாளையம் ஊராட்சியில் 1, 3 வார்டுகளில் தலா ஒரு வேட்புமனுவும், புங்கம்பாடி ஊராட்சியில் 3வது வார்டில் ஒரு வேட்புமனுவும், வாய்ப்பாடி ஊராட்சியில் 1வது வார்டில் ஒரு வேட்பு மனுவும் அளிக்கப்பட்டது.

பெருந்துறை ஒன்றியத்திற்கு ராஜேந்திரனும், சென்னிமலை ஒன்றியத்திற்கு மாரிமுத்துவும் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக மனுவை பெற்று கொண்டனர். முதல் நாளான நேற்று விண்ணப்பங்களை மட்டும் ஏராளமானோர் வந்து பெற்றுச் சென்றனர். வரும் 11ம் தேதி முதல் தலைவர் மற்றும் யூனியன் கவுன்சில் வார்டுகளில் வேட்பு மனுத்தாக்கல் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>