வானியில் ஆர்வம் காட்டாத வேட்பாளர்கள் முதல் நாளில் மூவர் மட்டுமே வேட்புமனு தாக்கல்

பவானி, டிச.10: பவானி ஊராட்சி ஒன்றியத்தில் 15 கிராம ஊராட்சி தலைவர்கள், 150 வார்டு உறுப்பினர்கள், 2 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மற்றும் 17 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 184 பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது.

பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 42,617 பேரும், பெண் வாக்காளர்கள் 44,386 பேரும் என மொத்தம் 87,103 பேர் உள்ளனர். இப்பதவிகளுக்காக நடைபெறும் தேர்தலுக்கு 133 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், குருப்பநாயக்கன்பாளையம் ஒரிச்சேரிப்புதூர், புன்னம், சின்னமேட்டூர் ஆகிய வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கான வேட்பு மனுதாக்கல் பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று துவங்கியது. கவுந்தப்பாடி ஊராட்சிக்கு தலைவர் பதவிக்கு கண்ணாடிப்புதூரை சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தொட்டிபாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1, 6 வார்டுகளுக்கு தலா ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளனர். முதல் நாளான நேற்று மொத்தம் 3 வேட்பு மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டன.மொத்தமுள்ள 184 பதவிகளுக்கு சுயேச்சையாக முதல் நாளில் மூன்று பேர் மட்டுமே மனுத் தாக்கல் செய்துள்ளதால், வேட்பாளர்கள் மத்தியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆர்வம் இல்லாத நிலை காணப்படுகிறது.

Related Stories: