சத்தி அருகே டாஸ்மாக் கடை திறந்ததால் மக்கள் மீண்டும் போராட்டம்

சத்தியமங்கலம், டிச.10:  சத்தியமங்கலம் அருகே டாஸ்மாக கடை திறக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் சத்தியமங்கலம்-கோபி சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் கடந்த 7ம் தேதி திடீரென டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதைக்கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தியபின் டாஸ்மாக் கடை திறப்பது குறித்து முடிவெடுக்கலாம் என்றும், அதுவரை தற்காலிகமாக டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

Advertising
Advertising

இதையடுத்து, நேற்று காலை அப்பகுதி மக்கள் இப்பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது, டாஸ்மாக் ஊழியர்கள் மீண்டும் கடையை திறந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தாலுகா அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு டாஸ்மாக் கடை முன்பு திரண்டு கடையை மூடக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சத்தியமங்கலம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மீண்டும் தற்காலிகமாக டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: