கடைகளை மூடியதால் பரபரப்பு

சத்தியமங்கலம், டிச.10: புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலைய வணிக வளாகத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை நிலுவை தொகை செலுத்தாத ஏலதாரர்கள் கடைகளை திடீரென நேற்று மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் 30 கடைகள் உள்ளன. கடந்த 2015ம் ஆண்டு இந்த கடைகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் ஏலம் விடப்பட்டது. இந்த கடைகளை ஏலம் எடுத்த ஏலதாரர்கள் ஒரு கடைக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை  வாடகை செலுத்தி வந்தனர். கடந்த 2018ம் ஆண்டு கடைகள் மீண்டும் ஏலம் விடப்பட்டது. தற்போது, பஸ் நிலைய வணிக வளாகத்தில் உள்ள சில கடைகளுக்கு கடந்த 4 மாதமாக வாடகை நிலுவை தொகை செலுத்தாததால் கடந்த சனிக்கிழமை நகராட்சி அதிகாரிகள் வாடகை நிலுவையை டிசம்பர் 10ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இல்லையென்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.

இதனால், நேற்று காலை பஸ் நிலைய வணிக வளாகத்தில் கடைகளை ஏலம் எடுத்த ஏலதாரர்கள் கடைகளை  பூட்டிவிட்டு புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி அலுவலகத்திற்கு சென்று நகராட்சி ஆணையாளர் (பொ) சிவக்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  வாடகை நிலுவை செலுத்த கால அவகாசம் தருமாறும், கடந்த 3 ஆண்டுகளுக்கு கடைகள் ஏலம் எடுத்தபோது செலுத்திய டெபாசிட் தொகை திருப்பி வழங்கப்படாமல் உள்ளதால் உடனடியாக திருப்பி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.  தணிக்கை முடிந்தபின் டெபாசிட் தொகை வழங்கப்படும். வாடகை நிலுவை செலுத்த 2 நாட்கள் கால அவகாசம் தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து, ஏலதாரர்கள் நேற்று மதியம் 12 மணியளவில் பஸ் நிலைய வணிக வளாகத்தில் கடைகளை திறந்தனர்.

Related Stories:

>