சீரான மின் விநியோகம் கேட்டு மின் அலுவலகம் முற்றுகை

ஈரோடு, டிச. 10: சீரான மின்விநியோகம் வழங்க கோரி ஈரோடு நாராயணவலசு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை அப்பகுதி மக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வெட்டுக்காட்டு வலசு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உயர் மின் அழுத்தம், குறைந்த மின் அழுத்தம் என மாறி, மாறி சீரற்ற மின் விநியோகம் இருந்து வந்தது. இதனால், குடியிருப்புகளில் உள்ள டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களில் பழுது ஏற்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் மின்வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், வெட்டுக்காட்டு வலசு பகுதி மக்கள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று காலை நாராயணவலசு உதவி மின்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertising
Advertising

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில்,`சீரற்ற மின் விநியோகத்தால் வீட்டில் உள்ள மின் சாதன பொருட்கள் பழுது ஏற்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, எங்கள் பகுதியில் சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும்’ என்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு வடக்கு (வீரப்பன் சத்திரம்) போலீசார், மின்வாரிய அதிகாரிகள்  சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சீரான மின்விநியோகம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: