விளாத்திகுளம் அருகே காவு வாங்க காத்திருக்கும் பழையகாவலர் குடியிருப்பு

விளாத்திகுளம், டிச. 10:  விளாத்திகுளம் அருகே காடல்குடி கிராமத்தில் பராமரிப்பின்றி சேதமடைந்த பழைய காவலர் குடியிருப்பு எந்நேரத்திலும் இடிந்து விழுந்து உயிர்களை காவு வாங்கும் வகையில் உள்ளது. இதனால் அச்சத்தில் தவிக்கும் மக்கள், உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விளாத்திகுளத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் தூத்துக்குடி மாவட்ட எல்லையோரத்தில் காடல்குடி கிராமம் உள்ளது. இங்குள்ள காடல்குடி காவல் நிலையத்தில் பணியாற்றுவோர் நலன்கருதி பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட காவலர் குடியிருப்புகள் முறையான பராமரிப்பின்றியும், ஆண்டுகள் பல ஆனதாலும் சேதமடைந்தன. இதையடுத்து கடந்த 5  ஆண்டுகளுக்கு முன்பாக பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய காவலர் குடியிருப்பு கட்டப்பட்டது. இதையடுத்து இதில் காவலர்கள் குடியேறினர்.

ஆனால், பயன்படுத்தப்படாத நிலையில் மிகவும் பழுதாகி சேதமடைந்த நிலையிலும், எந்நேரத்திலும் இடிந்துவிழுந்து உயிர்ப்பலி வாங்கும் நிலையிலும் உள்ள பழைய காவலர் குடியிருப்புகள் இதுவரை அகற்றப்படவே இல்லை.இதனால் இந்த ஆபத்தான கட்டிடத்தை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசித்து வருவோர் அச்சத்துடனேயே உள்ளனர். மேலும், இப்பகுதியை பயன்படுத்தும்  சிறுவர், சிறுமிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது பெய்துவரும் தொடர்மழையால் பழைய காவலர் குடியிருப்பு எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் அபாயம் நிலவுகிறது. எனவே, மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக பழைய காவலர் குடியிருப்பை உடனடியாக அகற்ற வேண்டும் எனஅப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: