×

கழுகுமலையில் பராமரிப்பின்றி புதர்மண்டிய சிறுவர் பூங்கா

கழுகுமலை, டிச. 10: கழுகுமலையில் பராமரிப்பின்றியும், தொடர்  மழையாலும் புதர் மண்டிய சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர். தென் தமிழகத்தின் எல்லோரா என்றழைக்கப்படும் கழுகுமலை, சிறந்த சுற்றுலாத்  தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு, மலை மீதுள்ள சமணர் சிற்பங்கள், வெட்டுவான்  கோயிலை காண வெளி மாவட்டங்கள் மட்டுமன்றி வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா  பயணிகளும் அதிக அளவில் வருகை தருகின்றனர். இங்கு சிறுவர்கள் நலன்கருதி அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவில் இடம்பெற்ற ஊஞ்சல், சறுக்கு, ராட்டினம் உள்ளிட்டவற்றை சிறுவர்கள் பெரிதும் பொழுதைப் போக்கி வந்தனர். ஆனால், கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழையால் ெபருக்கெடுத்த தண்ணீர் குளம் போல் பூங்காவில் நின்றது.

இதனால் அப்பகுதியே சேறும், சகதியுமாக மாறியதோடு தற்போது புதர் மண்டிக் கிடக்கிறது. இதில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வருகையால் சிறுவர்கள் உள்ளே சென்று விளையாட முடியாத  சூழல் உருவாகியுள்ளது. இதனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட  அனுப்புவதற்கு அஞ்சுகின்றனர். அரையாண்டு தேர்வு விடுமுறை  விரைவில் வர உள்ளதால் அதற்கு முன்பாக பூங்காவை சீரமைக்கவும், தேவையான வசதிகள் செய்துதரவும் பேரூராட்சி நிர்வாகம் முன்வருமா? என்ற எதிர்பார்ப்புடன் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் உள்ளனர்.

Tags : Puduramandiya Children's Park ,Eagle Hill ,
× RELATED கழுகுமலையில் இலவச மருத்துவ முகாம்