×

முத்தையாபுரம் காவல்நிலையத்தை நள்ளிரவில் பொதுமக்கள் முற்றுகை

ஸ்பிக்நகர், டிச. 10: தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரம் காவல் நிலையத்தை நள்ளிரவில் பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி வரை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் எரிவாயு குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த எரிவாயு குழாய் பதிக்கும் பணியானது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் நிறைவடைந்த நிலையில் தூத்துக்குடி ஒன்றியம் வைகுண்டம் வடகால் பாசனத்திற்கு உட்பட்ட குலையன்கரிசல், பொட்டல்காடு ஆகிய விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிக்க முற்பட்டனர். இதனை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கடந்த ஜூலை 17ம்தேதி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி தாசில்தார்  ஜான் ஜெபராஜ் தலைமையில் நடந்த சமாதான பேச்சு வார்த்தையில் ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனம் வழியாகக் கொண்டு செல்லாமல் மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல விவசாய சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

பின்னர் 48 கண்வாய் கரையோரமாக உப்பு ஓடை வழியாக எரிவாயு குழாய் பதிக்க வேண்டும், கிராமத்தின் அருகே எரிவாயு குழாய் கொண்டு செல்லக்கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனிடையே அவ்வப்போது குழாய் பதிக்கும் பணியை மீண்டும் துவங்கி வந்தனர்.
பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் இதனால் பணியை தொடர முடியாமல் திரும்பி செல்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. வரும் 12ம்தேதி கிராம மக்கள் சார்பில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் பொட்டல்காடு ஊர் தலைவர் செல்வசேகர் வீட்டிற்கு சென்ற முத்தையாபுரம் போலீசார், போராட்டம் தொடர்பாக நோட்டீஸ் வழங்கியதாக தெரிகிறது. இதையடுத்து போராட்டத்தை அடக்க போலீசார், சம்மன் வழங்கியதாக கருதிய பொதுமக்கள், ஊர்தலைவர் செல்வசேகர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் நள்ளிரவு 12 மணி அளவில் முத்தையாபுரம் காவல் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார்,  சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் வழங்கியது சம்மன் அல்ல என்றும், உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளிப்பது தொடர்பான விதிமுறை என்று விளக்கம் அளித்தனர். போலீசார் அளித்துள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது: எரிவாயு குழாய் எதிர்ப்பு தொடர்பாக உண்ணாவிரதம் நடைபெறும் இடம் விபத்து பகுதி மற்றும் மருத்துவவசதி இல்லை. மேலும் உங்களது உண்ணாவிரத போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது. அதனால் அனுமதி வழங்க முடியாது என நோட்டீசில் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் வழங்கிய நோட்டீஸ் சம்மன் என தவறாக கருதி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டது தெரியவந்தது. போலீசார் அளித்த விளக்கத்தை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Civil Siege ,Police Station ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...