சாத்தான்குளம், திருச்செந்தூர் ஒன்றியங்களில் கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 8பேர் மனு தாக்கல்

சாத்தான்குளம், டிச. 10: ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி சாத்தான்குளம், திருச்செந்தூர்  ஒன்றியங்களில் நேற்று ஒரே நாளில் 8 பேர் வேட்புமனு தாக்கல்  செய்தனர். சாத்தான்குளம்  ஒன்றியத்தில் 24 கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கும், 180 கிராம ஊராட்சி  உறுப்பினர் பதவிக்கும், 14 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி மற்றும் 1 மாவட்ட  ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.  முதற்கட்டமாக  டிச.27ம்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு  தாக்கல் நேற்று துவங்கியது. வரும் 16ம்தேதி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம். முதல் நாளான நேற்று ஊராட்சித்  தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்  பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. கிராம ஊராட்சி உறுப்பினர்  பதவிக்கு அரசூர், புத்தன்தருவை, பன்னம்பாறை, நடவக்குறிச்சி ஆகிய  ஊராட்சிக்கு தலா ஒருவர் என 4பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.  சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று யாரும் வேட்புமனு  தாக்கல் செய்யாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

பலர் வேட்புமனு  தாக்கல்  செய்வதற்கான விண்ணப்பம் வாங்கி சென்றனர்.திருச்செந்தூர்: திருச்செந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 11  கிராம பஞ்சாயத்துகளில், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 11 இடங்களும், கிராம ஊராட்சி உறுப்பினர்கள் பதவிக்கு 84 இடங்களும், ஊராட்சி கவுன்சிலர்  பதவிக்கு 5 இடங்களும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ஒரு இடமும் உள்ளன. இதில்  போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய தேர்தல்  நடத்தும் அலுவலர் மற்றும் ஊராட்சி ஆணையாளரான சந்தோஷிடம் நேற்று தாக்கல் செய்தனர். நல்லூர் ஊராட்சி 9வது வார்டுக்கு ஒருவரும், பள்ளிப்பத்து  ஊராட்சியில் 4 மற்றும் 7 வது வார்டுகளுக்கு தலா ஒருவரும், வீரமாணிக்கம்  ஊராட்சி 1வது வார்டுக்கு ஒருவரும் என 4 பேர் நேற்று ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Related Stories: