×

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் வாகன விபத்துகளில் 900 பேர் பரிதாப பலி

தூத்துக்குடி, டிச. 10: தூத்துக்குடி மாவட்டத்தில்  கடந்த 3 ஆண்டுகளில் நடந்த வாகன விபத்துகளில் 900 பேர் பலியானதாக  எஸ்பி  அருண் பாலகோபாலன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பைக் பேரணி நடந்தது.  தூத்துக்குடி டிஎஸ்பி  பிரகாஷ் முன்னிலை வகித்தார். தலைமை வகித்த எஸ்பி  அருண்  பாலகோபாலன், பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தார்.  மேலும் சாலையில் ஹெல்மெட் அணிந்து டூவீலர் ஓட்டிவந்த நபர்களுக்கு  பரிசு,  இனிப்பு வழங்கிப் பாராட்டினார். தூத்துக்குடி தென்பாகம் காவல்  நிலையம் முன்பாக துவங்கிய இப்பேரணி பழைய பஸ் நிலையம்  வழியாக  குரூஸ் பர்னாந்து சிலை வரை சென்று, மீண்டும் தென்பாகம் காவல்  நிலையத்தில் நிறைவடைந்தது. இதில்  இன்ஸ்பெக்டர்கள்  அன்னராஜ், கிருஷ்ணகுமார், ஜெயபிரகாஷ், கோகிலா, வனிதா,  எஸ்ஐகள்  ரவிக்குமார், காந்திமதி, சிவகுமார், சங்கர், சுந்தரம், மற்றும் போலீசார்  பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து எஸ்பி அருண்பால கோபாலன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3,486 விபத்துகள் நடந்துள்ளன.  இதில் 900 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பைக்   பின்புறத்தில் அமர்ந்து இருந்தவர்கள், பாதசாரிகள் அதிகம். விபத்துகளை  தவிர்க்க அதிவேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும் கட்டாயமாக ஹெல்மெட், சீட்  பெல்ட் அணிய வேண்டும். இம்மாவட்டத்தில் சாலை விதிமுறை மீறல் தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளில் 8,27,366 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 4,27,973 வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழக காவல்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  காவலன் எஸ்.ஓ.எஸ். என்ற செல்போன் செயலியை பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆபத்துகாலங்களில்  பயன்படுத்தலாம். இச்செயலியை பயன்படுத்தினால்  10 நிமிடங்களில் போலீசார் சம்பவ இடத்துக்கு வருவார்கள். இதுகுறித்து மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டு வருகிறது’’ என்றார்.

Tags : vehicle accidents ,Thoothukudi district ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே...