தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் காலனியில் தேங்கிநின்ற மழைநீரை அகற்றும் பணி

தூத்துக்குடி, டிச. 10: தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் காலனியில் தேங்கிநின்ற மழைநீர், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ மேற்கொண்ட முயற்சியால், கலெக்டர் பிறப்பித்த உத்தரவின்பேரில் அதிக திறன்கொண்ட மோட்டார் மூலம் அகற்றப்பட்டது. இப்பணியை கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை கடந்த 10 நாட்களுக்கு மேலாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழைநீர் வெளியேறுவதற்கு போதுமான வடிகால் வசதி இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். லூர்தம்மாள்புரம், ராஜிவ் காந்தி நகர், கலைஞர் நகர், செயின்ட் மேரிஸ் காலனி ஆகிய பகுதிகளில் மழை நீர் முழுவதுமாக வடிந்து வந்த நிலையில் கடந்த 6ம் தேதி மீண்டும் பெய்த மழையால் மேற்கண்ட பகுதிகளில் மழைநீர் புகுந்து பழைய நிலைக்கு சென்றது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்ட வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., கலெக்டர் சந்தீப்நந்தூரியை தொடர்பு கொண்டு செயின்ட் மேரிஸ் காலனி நீர்த்தேக்கத் தொட்டி அருகில் பெரிய வகையிலான திறன் கொண்ட மின் மோட்டார் வைக்கவும், தேங்கிநிற்கும் மழை நீரை வெளியேற்றுமாறும் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர், உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு டிஆர்ஓ, ஆர்டிஓ உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அனுப்பிவைத்து பார்வையிட்டு ஆய்வுமேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அத்துடன் கீதாஜீவன் எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று 42 ஹெச்.பி திறன்கொண்ட மின்மோட்டார் அமைக்க நடவடிக்கை எடுத்தார். அதன்பேரில் நேற்று அங்கிருந்து அதிக திறன் கொண்ட மின் மோட்டார் மழைநீர் வெளியேற்றப்படுகிறது. தேங்கிநின்ற மழைநீரை வெளியேற்றும் பணியை கீதாஜீவன் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது திமுக மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி குடிநீர் ஆய்வாளர் பாலு, பொறியாளர் பிரிவு ஆய்வாளர் செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: